திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
ஆடி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 6.05 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பல்வேறு பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வர தொடங்கினர். கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். காலையில் குறைந்த அளவிலான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சாமி தரிசனம் 4 மணி நேரத்திற்கும் மேல் ஆனது.
மதியத்திற்கு மேல் ஏராளமான பக்தர்கள் வர தொடங்கினர். இதனால் மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
பவுர்ணமி கிரிவலமானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.48 மணியளவில் நிறைவடைகிறது. அதனால் பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
====
Thiruvannamalai Krivalam, Devotees, Shiva, Arunachaleswarar, Krivalam, Sami Darshanam, திருவண்ணாமலை கிரிவலம், பக்தர்கள், சிவன், அருணாசலேஸ்வரர், கிரிவலம், சாமி தரிசனம்