ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற மின் வணிக நிறுவனமான Dunzo, அரசாங்கத்தின் விற்பனை தளமான ‘ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ்’ என்ற ONDC உடன் இணைந்துள்ளது. இதன் மூலமாக ONDC-யை சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஏராளமான வணிகர்கள் மற்றும் பயனர்கள் அணுகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வாரத்தில் 1,500க்கும் மேற்பட்ட உள்ளூர் வணிகர்கள் Dunzo விற்பனையாளர் செயலி மூலம் இணைவார்கள் என்றும், அடுத்த 45 நாட்களில் உணவு, மளிகை, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை விற்பனைச் செய்யும் 20 ஆயிரம் வணிகர்கள் ஓஎன்டிசி செயலியுடன் இணைவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
டன்சோ இணை நிறுவனரும் டன்சோ மெர்ச்சன்ட் சர்வீசஸின் தலைவருமான டல்வீர் சூரி கூறுகையில், “நாங்கள் ONDC நெட்வொர்க்கில் இணைந்து இரண்டு வாரங்களில், நாள் ஒன்றுக்கு 3,000க்கும் அதிகமான மளிகைப் பொருட்களுக்கான ஆர்டரை பெற்றுள்ளோம். மேலும், எங்களின் வணிக கூட்டாளர்களும், அவர்களது தினசரி ஆர்டர்களில் 3 மடங்கு அதிகரிப்பை கண்டறிந்துள்ளனர். இந்த நெட்வொர்க்கில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.
உள்ளூர் வர்த்தகத்தை மேம்படுத்த ONDC செயலில் அதிக எண்ணிக்கையிலான உள்ளூர் வணிகர்களை இணைக்கும் முயற்சியில் டன்சோ ஈடுபட்டு வருகிறது. இனி டன்சோவில் இணைய உள்ள வணிகர்கள், தளவாட தளமான Dunzo4Business (D4B) இல் தானியங்கி முறையில் இணயக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகர்களுக்கான பொருட்கள், விநியோக ஆதரவு, தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சப்போர்ட்டையும் டன்சோ நிறுவனம் வழங்க உள்ளது.
டன்சோ தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை தங்களது செயலிக்குள் கொண்டு வருவதற்காக விரைவான, தடையில்லாத ஆன்லைன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ONDC-யின் MD மற்றும் CEO டி.கோஷி கூறுகையில், “நமது நாட்டில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் இதயமாக விளங்குகிறது. எந்தவொரு உண்மையான முன்னேற்றமும் அவர்களை உள்ளடக்கியிருக்க வேண்டும். இதனை முக்கியமான நோக்கமாகக் கொண்டே ஓஎன்டிசி-யுடன் இணைந்துள்ளோம். டன்சோ – ஓஎன்டிசி இணைவு ஆயிரக்கணக்கான புதிய உள்ளூர் வணிகர்களை கவர்ந்திழுக்கும். வாடிக்கையாளர்களுக்கு அதிக விருப்பத்தையும் வசதியையும் அளிக்கும் போது ஆன்லைனில் வந்து அவர்களின் வணிகத்தை வளர்த்துக் கொள்ளமுடியும்,” என்றார்.
பல்வேறு டெலிவரி முறைகளைப் பயன்படுத்தி மிட்-மைல் திறன்களைச் சேர்ப்பதைத் தவிர, இந்த ஆண்டு முதல் 20 நகரங்களுக்கு Dunzo4Business விரிவுபடுத்துவதை டன்சோ நோக்கமாகக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.