ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட இத்துறை சார்ந்த பல்வேறு தொழில்நுட்பங்களையும், இவை தொடர்பான தொழில்நுட்ப மேலாண்மையையும் பயிற்றுவிக்கும் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்குவது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி. இது சுருக்கமாக நிஃப்ட்(NIFT) என்று அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் 1986 ஆம் ஆண்டு முதல் இயங்கும் கல்வி நிறுவனமாகும்.
ஆடை வடிவமைப்புப் படிப்புகளுக்கான இளநிலை (Under Graduate – UG) மற்றும் முதுநிலை (Post Graduate – PG) பட்டப்படிப்புகளை வழங்குவதோடு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களையும் வழங்குகிறது நிஃப்ட். இத்துறைசார் கல்வியினைத் தருவதுடன், தொழில்சார் திறன்மிகு வல்லுநர்களையும் உருவாக்குகிறது.நிஃப்ட் சென்னை, பெங்களூரு, போபால், புவனேஸ்வர், காந்தி நகர்,ஐதராபாத், ஜோத்பூர், காங்ரா, கண்ணூர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, பாட்னா, ரேபரேலி, ஹில்லாஸ், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் இயங்கி வருவதோடு, துறைசார்ந்த பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. இக்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க, இந்நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.
NIFT வழங்கும் பட்டப்படிப்புகள் இளநிலைப் படிப்புகள்
அக்சசரி டிசைன் (Accessory Design), பேஷன் கம்யூனிகேசன் (Fashion Communication), ஃபேஷன் டிசைன் (Fashion Design), நிட்வேர் டிசைன் (Knitwear Design), லெதர் டிசைன் (Leather Design), டெக்ஸ்டைல் டிசைன் (Textile Design) என்ற பாடங்களில் 4 ஆண்டு பேச்சுலர் ஆஃப் டிசைன் (Bachelor of Design – B.Des.) இளநிலைப் படிப்பையும், அப்பேரல் புரொடக்ஷன் (Apparael Production) என்ற பாடத்தில் 4 ஆண்டு பேச்சுலர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (Bachelor of Fashion Technology – B.F.T ) என்ற இளநிலைப் படிப்பையும் தருகிறது.
முதுநிலைப் படிப்புகள்
டிசைன் ஸ்பேஸ் (Design Space) என்ற பாடத்தில் மாஸ்டர் ஆஃப் டிசைன் (Master of Design – M.Des.), மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் மேனேஜ்மென்ட் (Master of Fashion Management- M.F.M.), மாஸ்டர் ஆஃப் டெக்னாலஜி (Master of Fashion Tech – M.FTech.) ஆகிய 2 ஆண்டு முதுநிலைப் படிப்புகளைத் தருகிறது.
எத்தனை இடங்கள்?
இந்தியா முழுதும் இளநிலைப் படிப்பில் மாணவர் சேர்க்கை இடங்கள்
ஃபேஷன் டிசைனில் 450, லெதர் டிசைனில் 120, அக்சசரி டிசைனில் 420, டெக்ஸ்டைல் டிசைனில் 390, நிட்வேர் டிசைனில் 210, ஃபேஷன் கம்யூனிகேஷனில் 420, பி.டெக். அப்பேரல்
டிசைனில் 360
முதுநிலைப் படிப்பில் மாணவர் சேர்க்கை இடங்கள்
எம்.டி.எஸ். படிப்பில் 90, எம்.எஃப்.எம். படிப்பில் 420, எம்.எஃப்.டெக். படிப்பில் 100
கல்வித்தகுதி
பி.டி.எஸ். (B.Des.) படிப்பிற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் +2 தேர்ச்சியும், பி.எஃப்.டெக். படிப்பிற்கு இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ள பாடப்பிரிவில் +2 தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எம்.டி.எஸ். (M.Des.), எம்.எஃப்.எம். (M.Pharm) முதுநிலைப் படிப்புகளுக்கு ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது நிஃப்ட் அல்லது நேஷனல் இன்ஸ்டிடியூட்டின் 3 வருட இளநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எம்.எஃப்.டெக். (M.F.Tech.) படிப்பிற்கு, நிஃப்டின் பி.எஃப்.டெக், பி.இ., பி.டெக். ஆகிய ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, 1.10.2016 அன்றைய நிலவரப்படி, உச்ச வயது வரம்பு 23 ஆண்டுகள். ஆதிதிராவிட, பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு உண்டு. இட ஒதுக்கீடு: நிஃப்டின் இடங்களில், எஸ்.சி. 15%, எஸ்.டி. 7.5%, ஓ.பி.சி. 27%, மாற்றுத்திறனாளிகளுக்கு 3%, அயல்நாட்டினருக்கு 15%, அந்தந்த மாநிலத்தவருக்கு 20% இடஒதுக்கீடு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை
நிஃப்டின் www.nift.ac.in, https://applyadmission.net/nift 2017 ஆகிய இணையத்தளங்கள் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அனைத்து விவரங்களையும் இணையத்தளத்தில் தகவலறிக்கையின் வாயிலாக இலவசமாகப் பெறலாம்.விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1500ம், எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ரூ.750ம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் கிரெடிட், டெபிட் கார்டு வாயிலாகச் செலுத்தலாம் அல்லது ‘‘NIFT-HO’’ என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க டி.டி. எடுத்து விண்ணப்பிக்கலாம். டி.டி. மூலம் விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இணைத்து ‘Project Manager – CMS, All India Management Association, Management House, 14-Institutiral Area, Lodhi Road, New Delhi – 110 003’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை
விண்ணப்பித்தவர்கள், பொது அறிவு, திறன், நுண்ணறிவைச் சோதிக்கும் வகையிலான எழுத்துத் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வில் தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்படமாட்டாது.இளநிலை, முதுநிலை ஆகிய இரண்டு பட்டப் படிப்புகளுக்குமே 12.2.2017 அன்று தேர்வு நடைபெறும். இத்தேர்வில் B.Des, M.Des, என்ற படிப்புகளுக்கு காமன் எபிலிட்டி டெஸ்ட் (CAT – Common Ability Test), ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் (GAT – General Ability Test) என்ற இரு தேர்வுகளும், BFT, MFT, MFM படிப்புகளுக்கு ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் (General Ability Test – GAT) என்ற தேர்வும் நடத்தப்படும்.
காமன் எபிலிட்டி டெஸ்ட் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையும் நடைபெறும். B.F.Tech. படிப்பிற்கு GAT தேர்வே இறுதித் தேர்வாகும். B.Des. படிப்பிற்கு, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் Situation Test என்ற தேர்வைச் சந்திக்க வேண்டும்.
அதேபோல், M.Des, M.F.Tech, MFM படிப்புகளுக்கு, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குழு கலந்துரையாடல் (Group Discussion) நேர்முகத் தேர்வு (Personal Interview) இவற்றிற்கு அழைக்கப்படுவார்கள். தேர்வின் வடிவம் – பாடத்திட்டம் ஜெனரல் எபிலிட்டி டெஸ்டில் குவாண்டிடேடிவ் எபிலிட்டி, கம்யூனிகேஷன் எபிலிட்டி, இங்கிலீஷ் காம்ப்ரிஹென்சன்; அனாலிட்டிக்கல், லாஜிக்கல் எபிலிட்டி, பொது அறிவு, அன்றாட நிகழ்வுகள், கேஸ்-ஸ்டடி ஆகிய பாடத்திட்டங்களில் வினாக்கள் இருக்கும்.
சிச்சுவேஷன் டெஸ்ட் (Situation Test) பிரிவில், கொடுக்கப்பட்ட பொருள்களைக்கொண்டு புதிய வடிவங்களை உருவாக்கும் திறன், ஆக்கப்பூர்வத் திறன், காம்போசிஷன் ஆஃப் எலிமன்ட்ஸ், நிறக்கலவைத் திறன் (Colour Combination) இவை சோதிக்கப்படும். கலந்துரையாடல், குழு கலந்துரையாடல், கேஸ்-ஸ்டடி (case study) இவை இருக்கும். இதில் இன்டர் பர்சனல் ஸ்கில் ஆளுமைத் திறன், கம்யூனிகேஷன் உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படும். இதே போன்ற திறன்கள்தான் நேர்முகத் தேர்விலும் சோதிக்கப்படும்.
படிக்கக் கடன், ஊக்கத்தொகை
இப்படிப்புகளை படிக்க, நிஃப்டுடன் பரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கும் யூனியன் பேங்க் ஆஃப் இன்டியாவிலிருந்து (Union Bank of India) கல்விக் கடன் பெறலாம். இவை தவிர NIFT, மெரிட் ஸ்காலர்ஷிப், பொருளாதார உதவி இவற்றையும் தருகிறது. Students Assistance Bank Program வாயிலாக பகுதி நேர வேலைவாய்ப்பும் உண்டு. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.01.2017
தொடர்புக்கு: NIFT Head Office, NIFT Campus, HAUZ KHAS, Near Gulmohar Park, New Delhi – 110 016, Ph : +91-11-26542000. www.nift.ac.in – சென்னை: NIFT Campus, Rajiv Gandhi Salai, Taramani, Chennai – 600 113. Ph: 044 – 22542755 / 22542756.