"தள்ளுபடி தருவதாக ஆன்லைனில் வலம் வரும் லிங்க்'' - யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை…

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என தொடர் பண்டிகை காலத்தையொட்டி பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் தங்களின் பொருட்களை விற்பனை செய்ய சமூகவலைதளங்களை ஒரு முக்கிய பிளாட்பார்மாக விளங்கி வருகிறது.

அந்தவகையில், வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆபர் என்ற பெயரில் அனைவரது கைபேசிகளுக்கும் குறுஞ்செய்தி வருகிறது. அதில் உள்ள லிங்கை க்ளிக் செய்தால் பிரபல நகைக்கடை, துணிக்கடை, உணவகங்கள் தள்ளுபடி தருவதாகவும் பதிவுகள் உள்ளன. அதன்படி, இந்த பதிவுகள் குறித்து தனியார் நகைக்கடை நிறுவனம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தங்கள் நிறுவனத்தின் சார்பில் ஆபர் என்ற பெயரில் லிங்க் எதுவும் அனுப்பப்படவில்லை. தங்களின் நிறுவனத்தின் 36வது ஆண்டுவிழாவையொட்டி சிறப்பு பரிசு தருவதாக லிங்க்-கள் பகிரப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல்வேறு பண மோசடி நடைபெற வாய்ப்புள்ளதால், இதுபோன்ற குறுஞ்செய்திகள் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் கைப்பேசிகளுக்கு வந்தால் அதனை உடனடியாக டெலிட் செய்து விட வேண்டும் எனவும், அதனை யாருக்கும் பகிர வேண்டாம் எனவும் அந்த நிறுவனம் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.