மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு இறுதி முடிவை அமைச்சர் அறிவிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் இன்னும் வாட்டுகிறது. வெயிலின் தாக்கம் குறையவில்லை. மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். இந்தநிலையில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னா், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். அரசு, தனியார் பள்ளிகள் அனைத்தும் அதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறப்பது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறைந்தபட்சம் தொடக்கப் பள்ளிகள் மாணவர்களுக்காவது விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனா்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், “பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது தொடா்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவை அமைச்சா் விரைவில் அறிவிப்பார்” எனத் தெரிவித்தனர்.