இந்தியாவில் உயர்கல்வியைத் தொடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. ‘படிப்பு முடித்து வேலை கிடைக்கவில்லை’ என வருந்தும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது. அதேசமயம், எங்களுக்குத் தகுதி வாய்ந்த ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற தொழில் நிறுவனங்களின் கவலையும் விரிந்துகொண்டேதான் போகிறது.
போட்டி அதிகமாகிவிட்ட நிலையில், நிறுவனங்கள் தங்களுக்கான ஊழியர்களை 100 சதவிகிதம் தகுதி வாய்ந்தவர்களாகவே தேடத் தொடங்குகிறார்கள். அது தங்களை முழுமையாகத் தயார்படுத்திக்கொள்ளாத இளைஞர்களுக்கு பின்னடைவையே உருவாக்குகிறது. அரசு நிறுவனங்களிலும் இதே நிலைதான். ஏராளமான இளைஞர்கள் படிப்பை முடிக்கிற நிலையில் தகுதியும், திறமையும் வாய்ந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் போட்டித் தேர்வுகள். மத்திய – மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்கள் போட்டித் தேர்வுகளை நடத்துகின்றன. அவற்றில் சில முக்கியத் தேர்வுகளைப்பற்றி பார்ப்போம்…
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வுகள் மத்திய அரசு தங்கள் நிர்வாகத்தை திறம்பட நடத்துவதற்காகத் தகுதியும், திறமையும் வாய்ந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. அந்த அமைப்புதான் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்.
இந்த அமைப்பு, தகுதி வாய்ந்த பணியாளர்களைக் கண்டுபிடித்து நிர்வாக விதிமுறைகளுக்கு ஏற்ப பணியமர்த்த உதவுகிறது. மத்திய அரசு ஊழியர்களின் பதவி நியமன முறைகள் பற்றி தீர்மானிக்கும் பணியையும் இந்த அமைப்பு மேற்கொள்கிறது. இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. யு.பி.எஸ்.சி. நடத்தும் சில முக்கியத் தேர்வுகள்…
இந்திய அளவில் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.
இந்தத் தேர்வுகள் எப்போது நடத்தப்படுகின்றன?
தேர்வு எழுதுவதற்கு என்னென்ன தகுதிகள் தேவை?
எந்தெந்த பதவிகளுக்காக இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன? தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும்?
எவ்வளவு செலவு ஆகும்? தேர்வுக்கான பாடத்திட்டங்கள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் விரிவாகத் தெரிந்து வைத்துக்கொண்டு தேர்வுக்குத் தயாராக வேண்டும். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தகுந்த பயிற்சிக்குப் பின்னர் நேரடியாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற பணிகளில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இவைதவிர, இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அஞ்சல்துறை, பாதுகாப்புத் துறை, ரயில்வே துறை, தகவல் துறை, காவல் துறைகளில் உயர்பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தவிர புதுச்சேரி சிவில் சர்வீசஸ் மற்றும் டெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பல்வேறு மத்திய அரசு பதவிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.