சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவை பொதுமக்கள் பார்வையிடலாம்!

சென்னை அண்ணாநகரின் அடையாளமாக திகழ்ந்த டவர் பூங்காவில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் கோபுரத்தில் ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று. டாக்டர் விஸ்வேஸ்வரர் பெயரிலான இந்த பூங்கா 1968ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான இந்தப் பூங்காவின் மையப்பகுதியில் உள்ள கோபுரத்தின் உயரம் 135 அடி. 12 அடுக்குகள் கொண்ட இந்த டவரில் ஏறினால், சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளின் அழகையும் ரசிக்கலாம்.

அண்ணாநகரின் அடையாளமாகத் திகழும் இந்த பூங்காவில், பல்வேறு சினிமா பாடல்கள், சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. 1968ல் வெளிவந்த கலாட்டா கல்யாணம், 1972ல் வெளியான பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட படங்களில் இந்த டவரின் தோற்றம் மட்டுமன்றி, பூங்காவின் அழகையும் காண முடிந்தது.
கலையரங்கம், உடற்பயிற்சி செய்யும் வசதி ஆகியவைகளைக் கொண்ட இந்த பூங்கா சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சில அசம்பாவித சம்பவங்களால் இந்த பூங்காவில் உள்ள டவரில் மக்கள் ஏற கடந்த 2011ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. பூங்காவிற்கு நடைபயிற்சி செல்வோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, 97 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. மாநகராட்சி நிதி ஒதுக்கீட்டில் நடந்த பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட பூங்காவை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா நகர் பூங்காவில் உள்ள டவரில் ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோபுரத்தில் ஏறுபவர்கள் கீழே விழாமல் தடுக்க பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கோபுரத்தின் பக்கவாட்டுப் பகுதிகள் முழுவதும் பாரம்பரிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கடந்த 12 ஆண்டுகளாக பூங்காவில் மட்டுமே அனுமதி என்ற நிலை மாறி, தற்போது டவருக்கும் பொதுமக்கள் செல்லலாம் என்பதால், பெயருக்கு ஏற்ப மீண்டும் முழுமை பெற்றுள்ளது அண்ணாநகர் டவர் பூங்கா.