குருவை விட்டு விலகும் ராகு..! ஐப்பசிக்குப் பின் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்?

ராகு கேது பெயர்ச்சி திருக்கணிதப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 30ஆம் தேதியன்று நிகழப்போகிறது. நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரக்கூடியவை. மேஷ ராசியில் இருக்கும் ராகு பகவான் மீன ராசிக்கும், துலாம் ராசியில் இருக்கும் கேது பகவான் கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராகுவும் கேதுவும் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள். ராகு கேது இடப்பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் அமர்ந்து குடும்பத்தில் சொல்ல முடியாத அளவு கஷ்டங்களை கொடுத்து வருகிறார் ராகு பகவான். ஐப்பசி மாதம் முதல் உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். உங்கள் குடும்பத்தில் அமைதி திரும்பி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மன உளைச்சல்கள் நீங்கும். பண வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். சொத்து பிரச்சனைகளில் சுமூக தீர்வு ஏற்படும். உங்கள் ஜென்ம ராசியில் அமர்ந்து உடல் நிலையில் தொந்தரவு கொடுத்து வரும் கேது பகவான், ஐப்பசி மாதம் முதல் விரைய ஸ்தானமான 12 ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். புதிய தொழில் தொடங்க சரியான தருணம், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது நாள் வரை மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு நீங்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

விருச்சிக ராசி

உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டில் பயணம் செய்யும் ராகு பகவான், ஐப்பசி மாதம் முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோனியம் பெருகும். செய்வதறியாது இருந்து வந்த மந்த நிலை மாறி புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். கிடைக்கும் வேலையில் உங்களை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. புது முயர்ச்சியில் சற்று நிதானம் தேவை. ஆடை, ஆபரணங்கள் சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். 12ஆம் வீட்டில் உள்ள கேது பகவான் ஐப்பசி மாதம் முதல் உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சென்று அமர போகிறார். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கைகூடும். வங்கியில் வாங்கிய கடன்களை பைசல் செய்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

தனுசு ராசி

உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து தொல்லைகளை கொடுத்து வந்த ராகு பகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீடான சுக ஸ்தானத்திற்கு வந்து அமர போகிறார். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். எந்த பிரச்னைகளையும் சுமூகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது பகவான் ஐப்பசி மாதம் முதல் உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டிற்கு வரப்போவதால் வேலை தொழிலில் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களிடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கி அன்பு பாராட்டுவார்கள். வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் தேடி வரும்.

மகர ராசி

உங்கள் ராசிக்கு 4ஆம் இடத்தில் அமர்ந்து பயணம் செய்த ராகு பகவான், ஐப்பசி மாதம் முதல் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் வந்து அமரப்போகிறார். எதிலும் வெற்றி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். அடகு வைத்து நகைகளை திருப்புவீர்கள். கடன்கள் பைசலாகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்னை விலகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தடைபட்டு வந்த சுபகாரியங்களை இனிதே சிறப்பாக நடந்தேறும். உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் பயணம் செய்கிறார் கேது. ஐப்பசி மாதம் முதல் கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். வேலையில் நிலவி வந்த தேக்க நிலை மாறும். பெண்களின் நட்பு கிடைக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெருகும்.

கும்ப ராசி

ராகு பகவான் தற்போது மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். 2ம் இடம் என்பது செல்வம், குடும்பம், பணம் கையிருப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள், வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு வரும். நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகமும் கைகூடி வரும். தடைபட்ட சுப காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். எட்டாம் வீட்டில் அமரும் கேதுவினால் தொட்டது துலங்கும். போட்டி, பொறாமை, எதிரிகள் தொல்லைகள் நீங்கும். வருமானம் அபரிமிதமாக வரும். நிதானமாக பேசுங்கள். கோபத்தை தவிருங்கள். செலவுகள் அதிகம் வரும். சிக்கனமும் சேமிப்பும் தேவை. நாவடக்கம் ரொம்ப முக்கியம். பங்குச்சந்தையில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் உங்களுக்கு பலன் கிடைக்கும். சிலருக்கு உயர் பதவிகள் தேடி வரும். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள் விலகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வேகம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரிய தடைகள் நீங்கும்.

மீன ராசி

உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டில் பயணம் செய்யும் ராகு பகவான், ஐப்பசி மாதம் முதல் உங்கள் ஜென்ம ராசிக்கு வரப்போவதால் கஷ்டங்கள் விலகி நற்பலன்களை அனுபவிக்க போகிறீர்கள். முதல் இரண்டு மாதங்கள் மந்தமான நிலை உருவாகும். பிறகு இனி எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிட்டும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் பேச்சில் ஒரு நிதானமும் பொறுப்பு தன்மையும் தென்படும். அஷ்டம ஸ்தானமான 8வது வீட்டில் பயணம் செய்யும் கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும் இதனால் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டைகள் வந்து போகும் யாராவது ஒருவர் விட்டு கொடுத்து போனால் வாழ்க்கை இனிமையாக மாறும். ஒற்றுமை ஓங்கும். வரவுக்கு மீறி செலவு செய்வதை தவிர்க்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு திருமண யோகம் கைகூடும்.