ராயன் விமர்சனம்- தனுஷுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து கொண்டிருக்கும் தனுஷ், அவ்வப்போது டைரக்ஷன் செய்வதையும் தன் பாணியாக வைத்திருக்கிறார். அந்த வகையில் இவரது டைரக்ஷனில் வெளியான ப.பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது 50 வது படத்தை அவரே இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ராயன்.

ராயன் தன் தம்பிகள் மற்றும் பிறந்த குழந்தையான தங்கையுடன் கிராமத்தில் இருந்து கிளம்புவதுடன் படம் துவங்குகிறது. நகரத்திற்கு வரும் அவர்கள் காய்கறி சந்தையில் வேலை செய்யும் சேகரின்(செல்வராகவன்) உதவியை பெறுகிறார்கள். இதையடுத்து கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வருகிறது கதை.

சிறுவர்களாக வந்தவர்கள் வளர்ந்து நிற்கிறார்கள். அண்ணன் ராயன் பொறுப்பானவராகவும், தன் தம்பிகள், தங்கைக்கு தந்தை போன்றும் இருக்கிறார். பெரிய தம்பியான முத்து(சந்தீப் கிஷன்) ஒரு கோபக்காரர். சின்ன தம்பி மாணிக்கம்(காளிதாஸ் ஜெயராம்) ஒரு கல்லூரி மாணவர். தங்கை துர்கா(துஷாரா விஜயன்) என்றால் மூன்று பேருக்கும் உயிர். தங்கைக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்க்க விரும்புகிறார் ராயன்.

திருமண முயற்சியில் ஈடுபடும்போது இரண்டு கேங்ஸ்டர்களான சேது(எஸ்.ஜே. சூர்யா)
மற்றும் துரை (சரவணன்) ஆகியோர் இடையே சிக்கிக் கொள்கிறார். ஒரு ஏரியா தொடர்பாக சேது, துரை இடையே மோதல் உண்டு. இந்நிலையில் சேது, துரை இடையேயான பிரச்சனையை தூண்டிவிட்டு நகரை சுத்தம் செய்ய விரும்புகிறார் அங்கு வரும் போலீஸ் அதிகாரி(பிரகாஷ் ராஜ்). இப்படி செல்கிறது கதை.

ராயன் படத்தின் கதை புதிது அல்ல. அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. ஆனால் தனுஷ் கதை சொன்ன விதமும், நடிகர்கள், நடிகைகளின் நடிப்பும் தான் படத்தை காப்பாற்றுகிறது. படத்தை இயத்கிய விதத்திற்காக தனுஷை பாராட்டியே ஆக வேண்டும். அவருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறது தொழில்நுட்ப குழு என்பது பெரிய திரையில் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் படத்தின் பெரிய பலம். ஏ.ஆர். ரஹ்மானின் இசை மற்றொரு பலம்.

அண்ணன், தம்பிகள், தங்கை இடையேயான உறவு தான் படத்தின் உயிரே. இது சகோதரர்கள், சகோதரி இடையேயான பாசத்தை பற்றிய படம் என்பதை நம்மை மறக்கவிடவே இல்லை தனுஷ். அதனால் படத்தில் எவ்வளவு தான் வன்முறை இருந்தாலும் நம் கவனம் எல்லாம் அந்த சகோதர பாசத்தின் மீதே செல்கிறது. இது தான் ஒரு இயக்குநராக தனுஷுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி.