பொன்னியின் செல்வன் மூலமாக லைகாவுடன் கைகோர்த்த ரெட் ஜெயண்ட் மூவிஸ்

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. முன்னதாக, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் இயக்குனர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் இன்னும் சில நாட்களில் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் வெளியாகவிருக்கிறது.
இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம், பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் நீண்ட நாள் கனவு திட்டமான கல்கியின் மிகவும் பிரபலமான நாவலை அற்புதமாக கையாண்டுள்ளார் என்பதை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று நிரூபித்தது.

தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் பொன்னியின் செல்வன் படமும் ஒன்றாக மாறியிருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த பொன்னியின் செல்வன், மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்தின் பின்னணியில் அமைந்துள்ளது.