முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கழக உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
எங்கெல்லாம் தமிழ் ஒலிக்கிறதோ, எவ்விடமெல்லாம் தமிழர்களும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
தன் வாழ்நாளெல்லாம் தமிழ்மக்கள் பயன்பெறப் பாடுபட்ட தலைவரின் புகழ்போற்றும் வகையில் பயனுள்ள கட்டமைப்புகள் அவருடைய நூற்றாண்டில் உருவாகியுள்ளன. உருவாக்கப்பட்டும் வருகின்றன.
தலைவர் கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் ஆகஸ்ட் 18 ஞாயிறு மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சீர்மிகு விழாவில், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத் சிங் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தினை வெளியிடவிருக்கிறார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பின், 1970-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில், அண்ணாவின் நினைவாக ஒன்றிய அரசின் சார்பில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
பேரறிஞர் அண்ணாவின் படத்தின் கீழே ‘அண்ணாதுரை’ என்று கையெழுத்தையும் இடம்பெறச் செய்துவிட்டார் அண்ணாவின் தம்பியான தலைவர் கலைஞர்.
இந்திய அஞ்சல் தலை ஒன்றில் தமிழ் எழுத்துகள் இடம்பெற்ற முதல் அஞ்சல்தலை பேரறிஞர் அண்ணா நினைவு அஞ்சல் தலைதான்.
அண்ணாவின் நூற்றாண்டு நிறைவின்போதும் ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சராக இருந்த மதிப்பிற்குரிய பிரணாப் முகர்ஜி அவர்கள் அண்ணாவின் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.
வரலாற்றுச் சிறப்பு மிகுந்த அந்த விழாவில், அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த உங்களில் ஒருவனான நான், அண்ணா நூற்றாண்டு இணையதளத்தைத் தொடங்கிவைத்து, அண்ணாவின் பொன்மொழிகள் நூலினை வெளியிட்டு உரையாற்றுகின்ற நல்வாய்ப்பினைப் பெற்றிருந்தேன்.
“அண்ணா காலத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவரது உரைகளைக் கேட்பது ஆனந்தமாக இருந்தது. அவர் அவையில் உரை நிகழ்த்தினால் நாடாளுமன்றத்தின் இதர பகுதிகளில் எவரும் இருக்கமாட்டார்கள். மாற்றுக்கட்சி உறுப்பினர்களும், மக்களவையிலிருந்து அமைச்சர்களும் அண்ணாவின் பேச்சைக் கேட்க மாநிலங்களவைக்கு வருவார்கள். அவருடைய பேச்சு அன்றும் இன்றும் இரசித்துப் போற்றப்படுகிறது” என்று புகழாரம் சூட்டினார் அந்த விழாவில் நாணயத்தை வெளியிட்ட திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள்.
அண்ணாவின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடுகிற நேரத்தில் நான் விரும்புவது, “மாநில அதிகாரங்களுக்கு வலு சேர்த்து, மாநில மொழிகள் மத்தியிலே உயர வேண்டும்.
சமநிலையை அடைய வேண்டும்” என்று அந்த விழாவிலும் அண்ணாவின் தம்பியாக மாநில உரிமைக்குரலையும், தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கு இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழித் தகுதியையும் கோரினார் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். எந்த இடமாக இருந்தாலும் அங்கே தமிழுக்காக வாதாடியவர் நம் தலைவர் கலைஞர்.
தமிழ், காலந்தோறும் வளர்ச்சி பெற்று வென்றிட வேண்டும் என்பதே முத்தமிழறிஞரின் மூச்சாகவும் செயலாகவும் இறுதிவரை இருந்தது.
தமிழாகவே வாழ்ந்த தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டின் நினைவாக வெளியிடப்படும் 100 ரூபாய் நாணயத்தில் முத்தமிழறிஞரின் உருவத்துடன் அவர் கையெழுத்திலான, ‘தமிழ் வெல்லும்’ என்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன.
தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும், தலைவர் கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ஒருவனாக உரித்தாக்குகிறேன்.
இனிய விழா எனினும் எளிய விழா என்பதால் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சார்ந்த உடன்பிறப்புகள் நேரில் காணவும், தமிழ்நாட்டிலும், தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் நேரலையில் காணவும் அன்புடன் அழைத்து அகம் மகிழ்கிறேன்.