ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம்

தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார்.

ராமசுப்பிரமணியன், தமிழகத்தில் மன்னார்குடியில் பிறந்தவர். சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விவேகானந்தா கல்லுாரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லுாரியில் சட்டம் படித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றிய இவர், 2006ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2009ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் தெலுங்கானா மற்றும் ஆந்திரா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட அவர், இமாச்சல் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2019ல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

தன் பதவிக்காலத்தில் பல்வேறு சிறப்பான தீர்ப்புகளை வழங்கியதாக, பாராட்டுக்களை பெற்றவர் நீதிபதி ராமசுப்பிரமணியன். அவர் பணி ஓய்வு பெற்ற நிலையில், தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக தற்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.