தோனியை பின்னுக்குத் தள்ளி 5ஆம் இடத்தை பிடித்த ரோகித் சர்மா..!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடி 64 பந்துகளில் எல்லாம் 50 ரன்கள் சேர்த்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 74 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். மறுபுறம் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் எல்லாம் அரைசதம் கடந்து அசத்தினார். இதில் எட்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

இதனால் இந்திய அணி 20 புள்ளி ஐந்து ஓவர்கள் எல்லாம் 100 ரன்களை கடந்து வலுவான நிலையில் இருந்தது. மதியநேர உணவு இடைவெளியின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில் ரோகித் சர்மா அரை சதம் கடந்ததன் மூலம் மூன்று சாதனைகளை படைத்திருக்கிறார்.

அதாவது தொடக்க வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் கடந்து ஒரு சாதனையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். இதேபோன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 2000 ரன்களை தொட்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மா படைத்திருக்கிறார். இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா தோனியை முந்தி இருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மா இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.