விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடு செல்லும் விமானங்களுக்கும் மிரட்டல் விடுப்பது சகஜமாகிவிட்டது.
ஒரே நாளில் கிட்டத்தட்ட 24 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் 14ம் தேதி வரை 999 வெடிகுண்டு மிரட்டல்கள் விமானங்களுக்கு விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அக்டோபரில் மட்டுமே 666 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் பதிவாகி இருக்கிறது.
இதுபோன்ற மிரட்டல்கள் விமான நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது பயணிகளுக்கு பெரும் தலைவலியாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது.
ஒரு விமான நிறுவனத்தின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் அது விளையாட்டாகவோ அல்லது ஏதேனும் உள்நோக்கத்துடனோ விடுத்தால் அந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தெரிகிறது. இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்திருத்தத்தின் படி ரூ.1.லட்சம், ரூ.50 லட்சம் என ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கலாம்.