ஜியோ நிறுவனத்தின் அம்பானியே மூக்கில் விரல் வைக்கும்படி டிடிஎச் சேவைகளை வழங்குவதற்காக மட்டுமே, டாட்டா பிளே (Tata Play) நிறுவனமானது, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, ஜிசாட் 24 என்னும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியிருக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
இந்தியாவில் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளுக்கான (DTH Services) முக்கியத்துவத்தை பற்றி சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. அமேசான் பிரைம் (Amazon Prime), நெட்பிளிக்ஸ் (Netflix), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) போன்ற எத்தனையே ஓடிடி (OTT) தளங்கள் வந்தாலும், மக்கள் மத்தியில் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகள் மீதான ஆர்வம் குறைந்து விடுவதில்லை.
இதனால், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), டாட்டா (TATA) போன்ற மிகப்பெரும் நிறுவனங்களுக்கு, டிடிஎச் சேவைகள் என்பது மிகப்பெரும் வியாபாரமாக மாறி இருக்கிறது. ஆகவே, மக்களுக்கு தடையின்றி சேவைகளை வழங்க எவ்வளவு கோடி ரூபாய்களையும் செலவு செய்ய அந்த நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அந்த வரிசையில், டாட்டா பிளே நிறுவனம், மிகப்பெரும் சம்பவத்தை 2022ஆம் ஆண்டே சத்தமே இல்லாமல் செய்து முடித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (Indian Space Research Organisation) இஸ்ரோவின் (ISRO) கீழ் செயல்படும், நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NewSpace India Limited) நிறுவனத்துடன் இணைந்த டாடா பிளே நிறுவனம், டிடிஎச் சேவைகளை வழங்குவதற்காக மட்டுமே ஜிசாட் 24 (GSAT 24 Satellite) என்னும் செயற்கைக்கோளை கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தி இருக்கிறது.
இந்த செயற்கைக்கோள், கடந்த வாரம், தனது சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு விட்டது. அதைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 7) முதல் இந்த டிடிஎச் சேவைகள் தொடங்கப்பட்டன. டெல்லியில் உள்ள டாட்டா பிளே அலுவலகத்தில் இதன் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்வில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் அபூர்வா சந்திரா கலந்துகொண்டார்.
அப்போது, அவர் கூறுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக மக்களின் தேவைகளின் அடிப்படிப்படையில் டாடா பிளே நிறுவனத்துடன் இணைந்து, ஜிசாட் 24 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு இருக்கிறது. இதுவரை டாட்டா பிளே நிறுவனம், 600 அலைவரிசைகளை மட்டுமே வழங்கி வந்தது. ஆனால், ஜிசாட் 24 செயற்கைக்கோள் மூலம் 900 அலைவரிசைகளை வழங்கப்போகிறது.
இந்த அலைவரிசைகள் மூலம் நாட்டின் வடகிழக்கு மலைப் பிரதேசங்கள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து தொலைத்தூர பகுதிகளுக்கும் தடையில்லா சேவைகளை வழங்க முடியும் எனத் தெரிவித்தார். இந்த செயற்கைக்கோள் குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், “டாட்டா பிளே நிறுவனத்தின் டிடிஎச் சேவைகளை வழங்குவதற்காக, ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரோ மூலம் 4 டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 24 வடிவமைக்கப்பட்டது.
இந்த செயற்கைக் கோள் கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு, முழுமையான சுற்றுப்பாதை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த வாரம் முதல் முழுவீச்சில் செயல்படத் தொடங்கியதால், டிடிஎச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டில் முதல்முறையாக அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பத்தால் மட்டுமே உருவாக்கப்பட்டு, இயக்கப்படும் இந்த செயற்கைக் கோளானது, இந்தியா தொலைத்தொடர்பு துறையின் மிகப்பெரும் புட்சியாகும்” எனத் தெரிவித்தார்.
இதே போல எந்தவொரு தனியார் நிறுவனமும், நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் டிமாண்ட் டிரைவ் சாட்டிலைட் மிஷன் (Demand Driven Satellite Mission) மூலம் வணிக ரீதியான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இதற்கான தொடக்கத்தை டாட்டா நிறுவனம் செய்து முடித்துள்ளது. இனிமேல் செயற்கைக் கோள்கள் மூலம் டிடிஎச் சேவைகள் தடையில்லா ஸ்டீரிமிங்கை வழங்கப்போகின்றன. கேபிள் டிவிகளின் வருங்காலம் கவலைக்கு தள்ளப்பட்டுள்ளது.