தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்துடன் இணைந்து கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், யோகி பாபு, சமுத்திரகனி என பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு டாப் ஸ்டாரை திரையில் பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
ஹிந்தியில் அந்தாதூன் என்ற பெயரில் வெளிவந்த படத்தின் ரீமேக் தான் இது. கதைப்படி கண் பார்வையற்றவராக நடிக்கும் பிரசாந்துக்கு பியானோ வாசிப்பதில் அலாதி பிரியம். அவருடைய திறமையை பார்த்த கார்த்திக் தன் மனைவியான சிம்ரனை சர்ப்ரைஸ் செய்ய பிரசாந்தை வீட்டுக்கு அழைக்கிறார்.
அதை ஏற்று அவரின் வீட்டுக்கு வரும் பிரசாந்த் கார்த்திக் இறந்து கிடப்பதை பார்க்கிறார். அவரை கொலை செய்யும் சிம்ரன் பிரசாந்துக்கு கண் தெரியும் என்பதையும் கண்டுபிடிக்கிறார். இந்த கொலை எதற்காக நடந்தது? பிரசாந்த் ஏன் கண் தெரியாதவராக நடிக்கிறார்? இவர்கள் இருவரின் நோக்கம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இப்படம்.
ரீமேக் படம் என்பதால் அந்த கதைக்களத்தை அப்படியே சுவாரஸ்யம் குறையாமல் எடுத்துள்ளார் இயக்குனர். அதேபோன்று கதைக்கு ஏற்றவாறு அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களும் அப்படியே பொருந்தி போகின்றனர்.
நாயகன் பிரசாந்த் வழக்கமான தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதேபோல் அவரை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் சிம்ரன். கொலை செய்யும் காட்சிகளில் இவருடைய முகபாவனையும் நடிப்பும் வேற லெவல்.
அடுத்ததாக யோகி பாபு, ஊர்வசி ஆகியோரின் காமெடியும் ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது. ஆனால் இசையை பொருத்தவரை கொஞ்சம் கூட பொருந்தவில்லை. அது படத்தின் மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது.
இது போன்ற திரில்லர் வகை படங்களுக்கு பின்னணி இசை தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால் இப்படத்தில் அது சொதப்பி இருப்பது பெரும் குறையாக உள்ளது. இருந்தாலும் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் குறையாமல் செல்லும் இப்படத்தை தாராளமாக பார்க்கலாம். ஆக மொத்தம் டாப் ஸ்டாருக்கு அந்தகன் சரியான ரீ என்ட்ரியாக அமைந்துள்ளது.