குலசேகரபட்டினம் பகுதியில் விண்வெளி தொழில் பூங்கா! - இஸ்ரோ- டிட்கோ இடையே ஒப்பந்தம்

தென் தமிழகத்தின் குலசேகரபட்டின பகுதியில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்க முடிவாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆய்வு கழகத்திற்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து குலசேகரப்பட்டினத்தில் 1500 ஏக்கரில் விண்வெளி தொழிற்பூங்கா அமைப்பதற்கான நிலை எடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக டிட்கோ தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 59 பல்கலைக்கழகங்கள் 552 பொறியியல் கல்லூரிகள் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான திறன் பெற்ற மனித வளம் உருவாக்கப்படுகிறது என்றும் தமிழகம் தொழில்நுட்பக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிலையில் விண்வெளி துறைக்கு தேவையான திறன்மிக்க மனித வளம் தமிழகத்தில் கிடைக்கும் என்றும் டிட்கோ அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் மூலம் உலகளாவிய விண்வெளி அரங்கில் தமிழகம் சிறப்பிடம் பெறும் என்றும் டிட்கோ ஒரு அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
திறன் வாய்ந்த மனித வளம் முதலீட்டுக்கு உகந்த தொழில் சூழல் ஆகியவற்றுடன் நாட்டின் தென் கிழக்கு கடற்கரையில் தமிழகம் அமைந்துள்ளது . எனவே விண்வெளி தொழில்துறையினருக்கு உகந்த பகுதியாக தமிழகம் மாறி உள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போதுள்ள தொழில் கட்டமைப்பு மற்றும் அரசால் உருவாக்கப்பட்ட சூழல் புத்தாக்க தொழிலுக்கும் முதலீட்டுக்கும் வழி வகுத்துள்ளது. குலசேகரப்பட்டினத்தில் உள்ள கிராமங்களில் 2,233 ஏக்கர் பரப்பில் ரூபாய் 950 கோடி செலவில் புதிய ஏவுதளம் பிரம்மாண்டமாக அமைகிறது.