பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் கடந்த புதன்கிழமை, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் பிரமாண்டமான ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனைக்கு அனுமதி வழங்கியது.
ஏப்ரலில் முதல் முறை சோதனையின் போது ராக்கெட் வெடித்து சிதறிய நிலையில் பல கட்ட மேம்படுத்தலுக்குப் பின் 2-வது முறையாக எப்.ஏ.ஏ சோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்டார்ஷிப் ராக்கெட் இன்று சோதனை செய்யப்பட இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சோதனைப் பயணம் நாளை (சனிக்கிழமைக்கு) ஒத்தி வைப்பதாக ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தனது X பக்கத்தில், ராக்கெட்டின் கிரிட் ஃபின் ஆக்சுவேட்டர் மாற்றப் பட வேண்டும். அதனால் ஏவுதல் சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்
ஸ்டார்ஷிப் சோதனை எப்படி இருக்கும்?
ஸ்டார்ஷிப் சோதனை 1.5 மணிநேரம் நடைபெறும். இது முழுமையான பூமியின் சுற்றுப்பாதையில் நடத்தப்படும். அட்லாண்டிக், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களைக் கடந்து, கிழக்கு நோக்கிய பாதையில் விண்கலம் ஹவாய் அருகே பாதுகாப்பாக தரையிறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெடித்து சிதறிய ராக்கெட்
ஏப்ரல் மாதம் முதல் ஸ்டார்ஷிப் சோதனையின் போது, மெக்ஸிகோ வளைகுடாவில் ராக்கெட் வெடித்து சிதறியது. பல நிலைகளில் எஞ்சின் கோளாறு, விண்கலம் பிரிந்து செல்வதில் ஏற்பட்ட பிரச்சனை ஆகியவற்றால் சோதனை தோல்வியில் முடிந்தது.
சூப்பர் ஹெவி ராக்கெட் ஏன் தேவை?
நிலவு மற்றும் செவ்வாய் போன்ற தொலைதூர பகுதிகளுக்கு பேலோடுகளையும், மனிதர்களையும் அழைத்து செல்வதற்கு ஸ்டார்ஷிப் ராக்கெட் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் உயரமான ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ஷிப் விண்கலம் மற்றும் சூப்பர் ஹெவி ராக்கெட் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்டார்ஷிப் 100 பேர் வரை சுமந்து செல்லும். 150 மெட்ரிக் டன்கள் வரை சரக்குகளை ஏற்றி செல்ல முடியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது.
நாசா 2025-ம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு ஸ்டார்ஷிப் ராக்கெட் பயன்படுத்த 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.