ஶ்ரீபுரம் ஶ்ரீ நாராயணி பீடம் திருத்தல வரலாறு

பிரபஞ்சம்

உன்னதமான இந்தப் பிரபஞ்சம் யாவும் எல்லையற்ற மகாசக்தி நிரம்பியுள்ளது. கண்களுக்குப் புலப்படாத அந்த மகா சக்தியினை நாம் தெய்வம் என்கிறோம். ஐம்புலன்களையும் அதை அறிய முடியாது. ஐம்புலன்களின் சூட்சும சக்திகளாலும் தெரிந்து கொள்ள முடியாது. தெய்வமாகிய அந்த மகாசக்தியின் கருணை நமக்கிருந்தால் மட்டுமே, நம் உணர்வுகளுக்கு அது எட்டும். சிவனருள் பெற்ற மாணிக்கவாசகர் தாம் எழுதிய சிவபுராணத்தில் “அவனருளாலே அவன்தாள் வணங்கி” என்று குறிப்பிட்டுள்ளமை இங்கு நினைக்கத்தக்கதே. இந்த மகாசக்திக்குத் தனக்கென்று வடிவமோ, நிறமோ, குணமோ கிடையாது. எடுத்ததன் வண்ணமாகத் திகழ்கின்ற நீரைப்போல, சார்ந்திருக்கின்ற வடிவத்தின் வாயிலாக இந்தச் சக்தி வெளிப்படும். சுட்டிக்காட்டக் கூடிய பொருளாக அன்றி, சுகானுபவப் பேரின்ப சக்தியாகவே தெய்வ சக்தி விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முதலுமில்லை, முடிவுமில்லை.

யுகம் என்றால் என்ன?

இந்த உலகம் இதுவரை மூன்று யுகங்களைக் கண்டு நான்காவது யுகத்திலே நடைபோட்டுக் கொண்டுள்ளது. யுகம் என்றால் என்ன? யுகங்கள் ஏன் முடிவுறுகிறது? என்றே நம்முன் கேள்விகள் எழுகின்றன. யுகம் என்பது வருடத்தைப்போல, மாதத்தைப்போல, வாரத்தைப்போல, அளவியலைக் கொண்டு அளப்பதன்று. காரணம், தர்மத்தின் தொடக்கமாக இருக்கின்ற உலகானது, அதர்மத்தின் எல்லைக்கு என்று செல்கிறதோ அன்றே அந்த யுகமானது முடிகிறது. தெய்வச் சக்தியால் முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது. யுகம் என்ற சொல்லுக்கு நீண்ட என்ற பொருள் கொள்ளலாம்.

ஆகவே யுகம் என்பது நீண்டே இருக்கிறது. குறுகிய காலத்தில் ஒரு யுகம் முடிவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் தெய்வசக்தி என்பது எல்லையற்ற பொறுமையைக் கொண்டது. அதர்மத்தை எந்த அளவிற்குத் தாங்க இயலுமோ அந்த அளவிற்குத் தாங்கி, முடியாத பட்சத்தில் தர்மத்தைக் காக்க அவதாரம் எடுத்து அதர்மத்தைப் போக்கி நீதியை நிலைநாட்டும். மீண்டும் புதிய யுகம் தோன்றும். இந்த அளவிலே கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் முடிந்து கலியுகத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஏற்கனவே கூறியபடி அதர்மங்கள் அதிகரிக்கும்போது தெய்வ சக்தியானது ஏதாவது ஒரு வடிவத்தில் தோன்றி தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வந்து நீதியை நிலை நிறுத்துகிறது. ஆகவே அவதாரம் என்றால் “தெய்வம் தன் நிலையில் இருந்து இறங்கி வருதல்” என்பதாகும். உயிர்களின் பொருட்டு அரூபமாக இருக்கும் தெய்வம் ரூபவண்ணமாக மாறுதல் என்று கூறலாம்.

கிருதயுகம்

கிருத யுகத்திலே அதர்மம் இரண்யகசிபு வடிவில் உதயமானது. அதர்மம் அங்கு அட்டூழியம் புரியத் தொடங்கி கடைசியிலே “தவமிருந்து தான் பெற்ற தன் பிள்ளை” வரை வந்துவிட்டது. இரண்ய கசிபுவின் மகனான பிரகலாதன், ஶ்ரீ நாராயணரின் பரம பக்தன். பரம ஏழை சொல்லுக்கு தீவிர என்றும் பொருளுண்டு. அந்த அளவிற்கு தீவிர பக்தனாக விளங்கினான் பிரகலாதன். சதாகாலமும் ஹரியின் நாமத்தையே உச்சரிப்பவன். அப்பேர்ப்பட்ட மகனையும் இரண்யகசிபுவின் ஆணவம்விட்டு வைக்கவில்லை. தன்னைத் தவிர வேறெவரையும் வணங்கக்கூடாது; தன் நாமத்தைத் தவிர வேறு நாமத்தை உச்சரிக்கக் கூடாது என்றெல்லாம் ஆணை பிறப்பித்துச் செயல்படுத்தி வந்தான். மறுப்பவர்களை மரணத்தைத் தழுவச் செய்தான். ஈரேழு உலகமும் அவனைக் கண்டு நடுங்கியது. இவற்றுள் தேவலோகமும் அடக்கம். எதிர்ப்பவர்களை எல்லாம் வதை செய்வதையே தொழிலாகக் கொண்டான். மிருகத்தனமான இரண்யகசிபுவை; அந்த அதர்மத்தை அழிக்க தெய்வம் தன் நிலையை விட்டிறங்கி நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டியதாக இருந்தது. அதர்மம் அழிபட்டுத் தர்மம் நிலைபெற்றது.

திரேதாயுகம்

திரேதாயுகத்தில் அதர்மம் இராவணன் வடிவிலே தோன்றி, பூலோக உயிர்களையும், தேவர்களையும் இன்னும் எங்கெங்கு உயிர்கள் தோன்றியிருந்தனவோ அங்கெல்லாம் தன் கொடிய கரங்களை நீட்டி துன்புறுத்தியது. கற்புத் தெய்வமான சீதையையே கவர்ந்து செல்லும் நிலைக்கு இராவணன் ஆளானான். இந்த இராவணன் என்ற கொடிய அதர்மத்தை அழிக்க வந்ததுதான் இராம அவதாரம். தெய்வாம்சம் இராமனாக உருவெடுத்து இராவணனை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டியது.

துவாபரயுகம்

துவாபரயுகத்திலே மகாபாரதம் உருவானது. துரியோதனாதிகள் வடிவத்தில் அதர்மம் தலைவிரித்தாடிய போது தெய்வம் மனமிறங்கி கிருஷ்ணனாகப் பிறந்து நீதியை நிலைநாட்டியது.