மகாராஷ்டிராவில் புனேயைச் சுற்றி அமைந்துள்ள எட்டு கோயில்கள் விநாயகரின் சக்தி பீடங்களாக உள்ளன. இதில் ஒன்றான பாலி மோரேஷ்வரரை தரிசித்தால் வெற்றி கிடைக்கும்.
புராண காலத்தில் மிதிலா தேசத்தை மன்னர் சக்கரபாணி ஆட்சி செய்தார். நீண்ட காலம் கழித்து சூரியபகவானின் அருளால் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிந்து என பெயர் பெற்ற அவன், சூரியனை நோக்கி தவம் செய்து வயிற்றில் அமிர்தத்தை பெற்றான்.
எதற்காக என்றால்… வயிற்றில் அமிர்தம் இருக்கும் வரை அவனை யாராலும் கொல்ல முடியாது. இதை சோதிக்க எண்ணி தேவர்களை சிறைப்படுத்தினான் சிந்து. இவர்களை விடுவிக்கும்படி சிவபெருமானின் வாகனமான நந்தீஸ்வரர் தூது சென்றும் பயன் இல்லை. இதன்பின் மயில் மீது ஏறி வந்த விநாயகர் கோடரியால் அமிர்தத்தை வெளியேற்றி சிந்துவைக் கொன்றார்.
மயில் (மோர்) வாகனத்தில் ஏறி சிந்துவை வதம் செய்ததால் விநாயகரை ‘மோரேஷ்வர்’ என அழைக்கின்றனர். கோட்டை போன்ற வடிவம் கொண்ட கோயிலின் முன்புறம் பெரிய தீப்மாலா (எண்ணெய் விளக்குகளுடன் கூடிய கல்தூண்) உள்ளது. நான்கு வாசல் கொண்ட கிழக்கில் லட்சுமி நாராயணர், தெற்கில் பார்வதி சங்கர், மேற்கில் ரதி மன்மதன், வடக்கில் மஹிவராகர் சன்னதிகள் உள்ளனர்.
கோயிலின் எட்டு மூலைகளில் ஏகதந்தர், மகோதரர், கஜானனன், லம்போதரர், விகடர், விக்னராஜர், தும்ரவர்ணர், வக்ரதுண்டர் என விநாயகர் சிலைகள் உள்ளன. கருவறையை நோக்கி மூஞ்சூறும், நந்தியும் உள்ளன. மனைவி ரித்தி, சித்தியுடன் இடஞ்சுழி விநாயகராக காட்சி தருகிறார் மோரேஷ்வர். கண், தொந்தியில் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. காவிச் சாந்து பூசப்பட்டுள்ளது.
கோயிலின் அருகே ஓடும் கர்ஹா நதியை சுற்றி கணேச, பீம, கபில, வியாச, ரிஷி, சர்வபுண்ய, கணேஷ்கயா என ஏழு தீர்த்தங்கள் உள்ளன.
எப்படி செல்வது:
புனேவில் இருந்து நேட்புட் சாலை வழியாக 66 கி.மீ., விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி. நேரம்: அதிகாலை 5:00 – 10:00 மணி; மாலை 5:00 – 8:00 மணி தொடர்புக்கு: 96572 54563 அருகிலுள்ள கோயில்: பாலி சித்தி விநாயகர் 29 கி.மீ., (விரும்பியது கிடைக்க…) நேரம்: அதிகாலை 5:00 – 10:00 மணி; மாலை 5:00 – 8:00 மணி தொடர்புக்கு: 022 – 2422 3206, 2422 4438