நுரையீரலை ஆரோக்கியமா இருக்க சூப்பர் டிப்ஸ்!

உடலில் உள்ள மற்ற பாகங்கள் சிறிதளவு ஓய்வு எடுத்தாலும், நுரையீரல் என்றுமே ஒய்வு எடுத்ததில்லை. அது 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

நுரையீரலை பலரும் புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் மூலம் கெடுதல் செய்து வந்துள்ளனர். எனவே, நம் உடலில் அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரல் ஆக உள்ளது. நம்மை சுற்றியுள்ள காற்று நுரையீரலைத் தான் பாதிக்கிறது. அந்த நுரையீரலை பாதுகாக்கவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளவும் சில வழிமுறைகள் உள்ளன.

ஆரோக்கியமான நுரையீரலை பெறுவதற்கு நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில உணவுப் பழக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆப்பிளில் உள்ள பினோலிக் கலவைகள் மற்றும் பிளவனாய்டுகள் காற்று பாதையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை குறைவாக உள்ளது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், அவை நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து எளிதில் குணமாக வழிவகை செய்கிறது. இதில் உள்ள ஆக்சிஜனேற்ற குர்செடின் ஆன்ட்டி ஹிஸ்டமைன் ஆக செயல்படுகிறது. இது ஒவ்வாமையினால் ஏற்படும் ஹிஸ்டமைன் அறிகுறிகளைக் குறைக்கிறது.

நட்ஸ் மற்றும் விதைகள் நமது நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய மற்றொரு சூப்பர் ஃபுட் உணவாகும். பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா மற்றும் பூசணி விதைகள், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவை நமது உடலுக்கு தேவையான மெக்னீசியத்தைப் தருகின்றன. இது நமது சுவாச பாதைகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

உங்கள் உணவில் பிரவுன் ரைஸ், முழு கோதுமை போன்ற தானிய உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகள் நாள்பட்ட நுரையீரல் நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைப்பதாக கூறப்படுகிறது.

ப்ரோக்கோலியில் உள்ள சல்போராபேன் எனும் கலவை நுரையீரல் உயிரணுக்களில் காணப்படும் மரபணு செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் நுரையீரலில் ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. மேலும் நுரையீரலில் காற்று ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

மத்தி மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள் நாட்பட்ட நுரையீரல் நோய்க்கு சிகிச்சையாக பயன்படுகிறது. மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் நுரையீரல் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.

இஞ்சியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. இது நுரையீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், நுரையீரலில் உள்ள மாசுக்களை நீக்குவதற்கும் உதவுகிறது.

பூண்டில் உள்ள பிளேவனாய்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. இதனால் நுரையீரல் செயல்பாடு மேம்படுகிறது. 3 பல் பூண்டுகளைப் வாரத்திற்கு இரண்டு முறை உட்கொண்டவர்களை நுரையீரல் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 44 சதவிகிதம் குறைவு என்று ஆய்வில் கூறப்படுகிறது.

பீட்ரூட்டில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் சேர்மங்கள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. பீட்ரூட்டில் நைட்ரேட் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதன் காரணமாக நுரையீரல் செயல்பாடு எளிதாக நடக்கிறது. இந்த நைட்ரேட்கள் நமது உடலில் ரத்த நாளங்களை விரிவுபடுத்துவதற்கும், ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.