சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது. இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்கவே கூடாது. ஆனால், சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம். கோயில்களுக்கு இரும்புப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது சனிக்கிழமையில் செய்வது உத்தமம். சனிக்கிழமைகளில் எண்ணெய் கடைக்குச் சென்று எண்ணெய் வாங்கக் கூடாது. சனி நீராடினால் தோஷங்கள் விலகும். அதாவது சனிக்கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்கும். ஆனால், எண்ணெய் வாங்க சனிக்கிழமை உகந்ததல்ல.
108 பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அதில் உப்பு முதன்மையானது. உப்பை எப்பொழுதும் வெள்ளிக்கிழமைகளில் வாங்குவது சிறந்த பலன்களைக் கொடுக்கும். தவறியும் சனிக்கிழமையில் வாங்குவதை நிறுத்தி விடுங்கள். வெள்ளிக்கிழமைகளில் உப்பை வாங்கி பூஜை அறையில் வைத்து விட்டு பின் ஜாடியில் போட்டு அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டால் வீட்டில் செல்வம் கொழிக்கும். மகாலட்சுமி தேவி துடைப்பம் போன்ற பொருட்களில் வாசம் செய்கிறாள். வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை எப்பொழுதும் சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாது. சனி பகவானுக்கு உரிய எள் சனிக்கிழமையில் வாங்கக் கூடாத பொருளாகும். எள் எண்ணெய் கொண்டு கோயிலில் சனி பகவானுக்கு தீபம் ஏற்றினால் சகல செல்வங்களும் அதிகரிக்கும்.
சமையலுக்குத் தேவைப்படும் மாவு போன்ற பொருட்களையும் சனிக்கிழமையில் வாங்கக் கூடாது. வெள்ளிக்கிழமையில் மசாலா பொருட்களை வாங்குவதை மற்றும் அரைப்பதை தவிர்க்க வேண்டும். கூர்மையான பொருட்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாது. அப்படி வாங்கினால் தீராத துன்பமும் குடும்பத்தில் பிரச்னைகளும் உண்டாகும். சனிக்கிழமை அன்று புதிய ஆடைகளை வாங்கக் கூடாது. கருப்பு வஸ்திரம் வாங்கினால் தவறல்ல. சனிக்கிழமை அன்று அதேபோல் புதிய ஆடைகளையும் அணியக் கூடாது.