இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை: தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு- பிரதமர் மோடி

இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகா, 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

அதிபராக பதவியேற்ற பிறகு அனுரா குமார திசநாயகாவின் முதல் இந்திய பயணம் இதுவாகும். அதுமட்டுமின்றி முதல் வெளிநாட்டு பயணமும் இதுதான்.

நேற்று முன்தினம் இந்தியா வந்த அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து அவரை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் சந்தித்தனர்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்தியா, இலங்கை இருநாட்டு உறவு மேம்பாட்டுக்கான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

பின்னர் பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் திசநாயகாவும் இருநாட்டு உறவுகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர்.

இதன்பிறகு இரு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். பிரதமர் மோடி கூறியதாவது:-

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகா தனது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்கு இந்தியாவை தேர்ந்து எடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வருகை இருநாட்டு உறவில் புதிய ஆற்றலை கொடுத்துள்ளது. இருநாட்டு உறவில் எதிர்கால பார்வையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். பொருளாதார கூட்டாண்மையில் முதலீடு சார்ந்த வளர்ச்சி மற்றும் இணைப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

இயன்முறை, டிஜிட்டல் மற்றும் ஆற்றல் இணைப்பு ஆகியவை முக்கிய தூண்களாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே மின்சார இணைப்பு மற்றும் பெட்ரோலிய குழாய்கள் இணைப்பை நிறுவும் பணிகளை மேற்கொள்வோம். சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் விரைவுபடுத்தப்படும்.

இந்தியா இதுவரை 400 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி) மதிப்பிலான மானியங்கள் மற்றும் கடன்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களின் வளர்ச்சிக்கு இந்தியா உதவுகிறது. இலங்கையின் மகோ-அனுராதபுரம் ரெயில்வே பிரிவில் காங்கேசன்துறை துறைமுகம் வரை சமிக்ஞை (சிக்னல்) அமைப்பை புனரமைக்க மானியம் வழங்க தீர்மானித்துள்ளோம்.

யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் கிழக்கு பிராந்திய பல்கலைக்கழகங்களில் உள்ள 200 மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகைகளை வழங்கவுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையை சேர்ந்த 1,500 அரசு ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும். வீடுகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு, விவசாயம், பால்பண்ணை மற்றும் மீன்பிடித் துறைகளிலும் இலங்கைக்கு இந்தியா உதவும். இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள திட்டத்தில் இந்தியா பங்காளியாக இருக்கும்.

பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தத்தை விரைவாக முடிக்க முடிவு செய்துள்ளோம். ஹைட்ரோகிராபிக்கு ஒத்துழைக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம். கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, இணைய பாதுகாப்பு, கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகிய விஷயங்களில் இலங்கைக்கு ஆதரவு அளிக்கப்படும்.

இந்திய, இலங்கை மக்களுக்கு இடையிலான உறவுகள் நமது நாகரிகங்களில் வேரூன்றியவை. பாலி மொழியை செம்மொழியாக இந்தியா அறிவித்தபோது, அந்த கொண்டாட்டத்தில் இலங்கையும் இணைந்து கொண்டது.

படகு சேவையும், சென்னை-யாழ்ப்பாண விமானத் தொடர்பும் சுற்றுலாவை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் கலாசார உறவுகளையும் வலுப்படுத்தியுள்ளன.

நாகப்பட்டினம்-காங்கேசன்துறை படகு சேவை வெற்றிகரமாக தொடங்கப்பட்டதை அடுத்து, ராமேசுவரத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையிலும் படகு சேவையை தொடங்குவது என்று முடிவு செய்துள்ளோம். புத்த மத சுற்றுலா மற்றும் இலங்கையின் ராமாயணப்பாதை மூலம் சுற்றுலாத்துறையில் உள்ள மகத்தான ஆற்றலை உணரும் பணியும் தொடங்கப்படும்.

நமது மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விரிவாகப் பேசினோம். இந்த விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் தீர்வுகாண ஒப்புக்கொண்டோம்.

இலங்கையில் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்தும் பேசினோம். தமிழ் மக்களின் விருப்பங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புகிறோம். இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்துவதற்கும், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் அவர்கள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவரது முயற்சிகளில் இந்தியா நம்பகமான பங்காளியாக நிற்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகா கூறியதாவது:-

இந்தியாவுக்கு வந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும், ஒட்டுமொத்த குழுவுக்கும் அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் மேம்படுத்தப்படும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை நாங்கள் சந்தித்தோம். அந்த புதைகுழியில் இருந்து வெளிவர இந்தியா எங்களுக்கு பெரிதும் உதவியது.

எங்கள் நிலத்தை எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் வகையில் யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய பிரதமரிடம் நான் உறுதி அளித்துள்ளேன். இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாக வளரும். இந்தியாவுக்கான எங்கள் தொடர் ஆதரவை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்தியா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே, இலங்கையும் அதே பாதையில் செல்கிறது.

இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் தொந்தரவாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வை காண விரும்புகிறோம். கடலில் படகுகள் இழு வலை முறைகளை பின்பற்றி வருகின்றன. அது இந்த தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும். எனவே மீனவர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இலங்கை அதிபர் திசநாயகா, ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அவரை பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களும் சந்தித்தனர்.

ஒட்டுமொத்தமாக இந்த சந்திப்பில் மீனவர் பிரச்சினையை பொறுத்தவரை, மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். வன்முறையை தவிர்க்க வேண்டும் என இந்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான சிறப்பான உறவை கருத்தில் கொண்டு இந்த பிரச்சினையில் தீர்வுகாண விழையுமாறு அதிகாரிகளிடம் இருநாட்டு தலைவர்களும் வலியுறுத்தினர்.