சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: வரும் ஜன.,6ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் கவர்னர் ரவி உரை நிகழ்த்த உள்ளார். சட்டசபை எத்தனை நாட்கள் நடக்கும் என்பது அலுவல் ஆய்வு குழு தான் முடிவு செய்யும். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவதை முதல்வர் தான் முடிவு செய்ய முடியும்.
தீர்மானம் கொண்டு வந்தால் அதனை விவாதித்து நிறைவேற்ற சட்டசபை தயாராக இருக்கிறது. கடந்த முறை கவர்னர் உரையில் நாங்கள் முரண்பாடு செய்யவில்லை. இந்த முறை கவர்னர் உரையை முழுமையாக படிப்பார் என்று நம்புகிறோம், எனக் கூறினார்.
சட்டசபை கூட்டத்தொடர் 100 நாட்கள் நடத்தப்படும் என்று தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில், நாளுக்கு நாள் கூட்டத்தொடர் நாள் குறுகிக் கொண்டே செல்வதாக எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய கேள்வி பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
கடந்த 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகளுக்கு, குளிர்காலக் கூட்டத் தொடர் 2 நாட்கள் தான் நடத்தியிருக்காங்க. அதற்கு காரணம், கூடுதல் செலவினத்திற்கான தீர்மானத்தை தான் நிதியமைச்சர் அறிமுகப் படுத்தினார்.
விவாதம் இல்லாமல் நடந்த குளிர்காலக் கூட்டத் தொடரை, எவ்வளவு தாமதமானாலும், விவாதத்துடன் நடத்த முதல்வர் நடவடிக்கை எடுத்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது, மழை, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், குறுகிய நாட்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் 100 நாட்கள் நடத்தப்படும். 10 நாட்கள் குறைவாக நடந்தாலும், மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளில் எந்த குறையும் ஏற்படவில்லை. டங்ஸ்டன் தீர்மானத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,க்கு பேசுவதற்கு நீண்ட நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபடு பார்ப்பதில்லை, இவ்வாறு அவர் கூறினார்.