ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று தற்போது 3 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து செய்திகள் தீவிரமாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக பால்வளத்துறையில் எழுந்த சிக்கல் காரணமாக அமைச்சர் சா.மு.நாசர் மாற்றப்படுவார் என்றும் உதயநிதி, சபரீசன் குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ காரணமாக பிடிஆரும் துறை மாற்றப்படுவார் என்று தகவல்கள் பரவின.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையின்பேரில், அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாகவும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து கடந்த 9-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா அமைச்சராகப் பதவியேற்ற நிலையில், அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.