பல கோடி முதலீடு ஈர்ப்புடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வருகை...

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்று தமிழகத்துக்கு ரூ.7,616 கோடி முதலீட்டுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.82 லட்சம் கோடி) பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதில் ஒரு பகுதியாக, தமிழகத்திற்கு கூடுதல் முதலீடுகளை ஈர்த்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முதல்-அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்.

அவர் புறப்படுவதற்கு முன்பு, ‘கடந்த 3 ஆண்டுகளில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன. அதன் மொத்த மதிப்பு ரூ.9.93 லட்சம் கோடியாகும். அதன் மூலம் 18 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் ஈர்க்க அமெரிக்கா செல்கிறேன். இந்த பயணம் நிச்சயம் வெற்றிகரமாக அமையும்’ என்று பேட்டி அளித்திருந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில், மைக்ரோசிப், நோக்கியா, டிரில்லியன்ட் உள்ளிட்ட 18 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து, சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுரை, கோவை, திருச்சி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய தொழில்கள் மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காக ஒப்பந்தங்களை மேற்கொள்ள அந்த நிறுவனங்கள் முன்வந்தன.

முக்கியமாக, கூகுள் நிறுவனமும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைப்பது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆட்டோடெஸ்க் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே, தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில் சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி மொத்தம் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழக அரசு மற்றும் அந்த நிறுவனங்களுக்கு இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

இதன் மூலம் தமிழகத்தில் 10 ஆயிரத்து 965 வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஆப்பிள், மைக்ரோசாப்ட், நைக்கி, போர்டு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவன அதிபர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலும், தொழில் கொள்கைகளும் இருப்பதால், அந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) சென்னை வருகிறார். சென்னை திரும்புவதற்காக கடந்த 12-ந் தேதி சிகாகோ விமான நிலையத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அவரை அங்குள்ள தமிழர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். அவர்களுக்கு கையசைத்து விடை கொடுத்துவிட்டு விமானம் ஏறினார். துபாய் வழியாக அவர் இன்று சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 8.25 மணிக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அரசு சார்பில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவரை வரவேற்பார்.

சென்னை விமான நிலையத்தில், தனது அமெரிக்கா பயணம் மூலமாக தமிழகத்திற்கு வரும் புதிய தொழில் முதலீடுகள், ஏற்கனவே உள்ள தொழில்களின் விரிவாக்கத்திற்கான முதலீடுகள் பற்றிய புதிய தகவல்களை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.