சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் அவர் தமிழகத்திற்கு வருவது இது முறையாகும். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்றூ காலை மைசூர் வந்தடைந்த குடியரசுத் தலைவர், பின் சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்றார். அங்கு, ஆஸ்கர் வென்ற ‘The Elephant Whisperers’ ஆவணப்பட புகழ் யானைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கரும்பு வழங்கினார்.
பின்னர், யானைப் பாகன்களோடு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். இதையடுத்து மைசூர் விமான நிலையம் சென்றடைந்த அவர், விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார்.
பின்னர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் பேசிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கலாச்சாரம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. திருக்குறள் நம்மை பல நூற்றாண்டுகளாக வழிநடத்துகிறது. சிறந்த தலைவர்களை சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இவ்வாறு கூறினார்.