நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், ஆகஸ்ட் 22ஆம் தேதி, வியாழன் அன்று சென்னை பனையூரில் அமைந்திருக்கும் அவரின் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும் கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.
நடிகர் விஜய் சென்னையின் நீலாங்கரையில் அமைந்திருக்கும் அவருடைய இல்லத்தில் இருந்து பனையூருக்குச் சென்றார். அவருடைய அம்மா ஷோபா, அப்பா சந்திரசேகர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்திருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நடிகர் விஜய்க்கு தங்களின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் நடிகர் விஜய் துவங்கி வைத்தார். கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பு அக்கட்சியினர் அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர்.
“நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்பு உள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.”
“மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராகக் கடமையாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பேரில் உள்ள வேற்றுமைகளைக் கலைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகின்றேன்” என்ற உறுதிமொழியை அவர் வாசிக்க அவரது கட்சித் தொண்டர்கள் அதை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர்.
கட்சிக்கொடி சிவப்பு, மஞ்சள் என இரண்டு நிறங்களைக் கொண்டுள்ளது. நடுவில் உள்ள மஞ்சள் நிறப் பட்டையில் இரண்டு ஆண் யானைகள் இடம் பெற்றுள்ளன.
நடுவில் இடம் பெற்றிருக்கும் சிவப்பு நிற வட்டத்தில் வாகை மலரும் அதைச் சுற்றி நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. 28 நட்சத்திரங்களில் 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், இதர நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் துவங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அக்கட்சியைப் பதிவு செய்தார்.
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை இலக்காகக் கொண்டு தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ளது விஜயின் கட்சி.