பெண்கள் நினைத்தாலே எதையும் எளிதில் சாதித்துக்காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக வலம் வருகிறார் ஜோஹோ நிறுவனத்தின் திட்ட மேலாளர் ராதா வேம்பு. நிறுவனம் ஒன்றைத் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வரும் இவர், தற்போது இந்தியாவின் 3 வது பணக்காரர் பட்டியலில் இடம் பெறும் அளவிற்கு முன்னேறியுள்ளார். இப்படி பலருக்கும் உத்வேகத்தை அளிக்கக்கூடிய ராதா வேம்புவின் வாழ்க்கைப் பயணம் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ராதா வேம்பு கடந்த 1972 ல் பிறந்தவர். இவரது தந்தை சாம்பமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராஃபராகப் பணிபுரிந்தவர். இவரது சகோதர் ஸ்ரீதர் வேம்பு உள்பட 4 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். சென்னை ஐஐடி நிறுவனத்தில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர் தான் ராதா வேம்பு. இவர் படித்துக் கொண்டு இருக்கும் பொழுதே சகோதரர்கள் ஸ்ரீதர் வேம்பு மற்றும் சேகர் வேம்பு மற்றும் பிற நண்பர்களுடன் இணைந்து அட்வென்ட்நெட் என்ற நிறுவனத்தை நிறுவினார். பின்னர் பட்டப்படிப்பை முடித்தவுடன் கடந்த 1988 ஆம் ஆண்டு ராஜேந்திரன் தண்டபாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஜோஹோ நிறுவனம் (Zoho) நிறுவனம் ஸ்ரீதர் வேம்புவால் தொடங்கப்பட்டது. இணைய அடிப்படையிலான வணிக கருவிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வரும் ஜோஹோ நிறுவனம் உலகம் முழுவதும் ஒன்பது நாடுகளில் கிட்டத்தட்ட 12 அலுவலகங்களைக் கொண்டு செயல்படுகிறது. பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தின் திட்ட மேலாளராக ராதா வேம்பு பதவியேற்ற நிலையில் தற்போது இவருக்கென்று பெரும்பான்மையான பங்குகள் உள்ளன. தற்போது 250 குழுவிற்குத் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.
ஜோஹோவின் மென்பொருள்களை கிட்டத்தட் 6 கோடிக்கும் மேற்பட்டவர் பயன்படுத்துகின்றனர். இதோடு மட்டுமின்றி கிளவுட் அடிப்படையிலான வணிக மென்பொருளுக்கு பெயர் பெற்ற ஜோஹோ, வாட்ஸ் அப் போன்ற அரட்டை என்ற மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது. இவ்வாறு தொழில்நுட்ப வளர்ச்சிப் பெறும் ராதா வேம்புவின் சொத்து மதிப்பைப் பட்டியலிட்ட போர்ப்ஸ் தகவலின் படி, வேம்புவின் சொத்து இந்திய ரூபாய் மதிப்பில் 19,000 கோடி ஆகும். இதன் படி இந்தியாவின் 3வது பணக்காரப் பெண் என்ற அந்தஸ்ததையும் பெற்றுள்ளார் ராதா வேம்பு.
ராதா வேம்பு, ஹைடெக் அக்ரோ பிரைவேட் லிமிடெட், ஒரு விவசாய தொண்டு நிறுவனம் மற்றும் ஹைலேண்ட் வேலி கார்ப்பரேசன் பிரைவேட் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.