அதிவேகமாக பைக்குகளில் ட்ராவல் செய்து அதனை வீடியோக்களாக மாற்றி ட்வின் த்ரோட்லர்ஸ் எனும் தன்னுடைய யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமானவர் கோவையைச் சேர்ந்த TTF வாசன். இவருக்கு யூடியூப்பில் 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் ஒன்றில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அவருக்கு கூடிய கூட்டத்தை கண்டு பொதுமக்கள் மிரண்டனர். இதையடுத்து, இணையத்தில் TTF வாசன் மீது விமர்சனம் எழுந்தது.
இந்த சம்பவத்திற்கு பின்னர்தான் TTF வாசன் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். அதன் பின்னர் அனுமதிக்கப்பட்ட அளவை விட சாலையில் அதிவேகமாக பைக்கை ஓட்டுதல், ஜிபி முத்துவை பைக்கில் உட்காரவைத்து 150 கிமீ வேகத்தில் சென்றது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் கொடுத்த நேர்காணல்களும் பரபரப்பை கிளப்பியது.
ஆனால் அதற்கெல்லாம் துளியும் அசராத TTF தன் போக்கில் வழக்கம் போல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனிடையே பல்வேறு சர்ச்சைகளால் மேலும் பிரபலமான TTF வாசன் சினிமாவில் நடிக்கிறார்.
இந்நிலையில் TTF வாசன் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு, ‘மஞ்சள் வீரன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை செல்அம் என்பவர் இயக்க உள்ளார். பட்ஜெட் பிலிம் கம்பெனி எனும் நிறுவனம் தயாரிக்கிறது. TTF வாசன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளது.
299 கிமீ வேகத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. போஸ்டரில் கையில் ஈட்டியுடன் புல்லட் பைக்கில் பறக்கிறார் TTF வாசன். ‘மஞ்சள் வீரன்’ பட போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. விரைவில் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.