ஈரானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில்அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஈரானின் பிரஸ் டிவி மற்றும் ராய்ட்டர்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளன.
ஈரான் – அஜர்பைஜான் எல்லையில் கிஸ் கலாசி – கோடாஃபரின் அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சி நேற்று (மே 19) நடைபெற்றது.
இதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவுடன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார். ஈரானின் வடகிழக்கு நகரான தப்ரிஸ் அருகே வர்செகான் பகுதியில் ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கியது.
மோசமான வானிலை அல்லது மலையில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் அங்கிருந்து வரும் நிலையில் எப்படி விபத்து ஏற்பட்டது என அந்நாட்டு அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.
இவ்விபத்தை தொடர்ந்து இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமி மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு மீட்புக் குழுக்கள் ஹெலிகாப்டரை தேடி வருவதாக உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிடி தெரிவித்தார்.
அங்கு கடும் பனிமூட்டம் உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுவதாகவும், அந்த பகுதியில் 5 மீட்டர் வரைதான் கண்களால் பார்க்க முடிகிறது என்றும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மத்தி உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகளும் இருந்துள்ளனர்.
விபத்து நடந்து சுமார் 17 மணி நேர தேடலுக்கு பிறகு ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ட்ரோன் மட்டுமல்லாது சாட்டிலைட் தொழில்நுட்பம் மூலம் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரை அடையாளம் காணப்பட்டது.
ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து சிதறி தீக்கிரையாகியுள்ளது.
இந்நிலையில் இரான் அதிபர், வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்று ஈரானின் மூத்த அதிகாரிஒருவர் தெரிவித்தார் என்று ராய்ட்டர்ஸ் ஊடகம் கூறியது.
இந்நிலையில் இரானின் பிரஸ் டிவியும், “ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் வீரமரணம் அடைந்தனர்” என ட்வீட் செய்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். ஈரான் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது. இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான இப்ராஹிம் ரைசியின் பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.