இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350). மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று வெளியான தகவல்தான், இந்த பைக் மீதான எதிர்பார்ப்புகளை தூண்டியது. அந்த எதிர்பார்ப்புகளை கொஞ்சம் கூட பொய் ஆக்காமல், மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமையுடன் (Most Affordable Royal Enfield Bike), ஹண்டர் 350 களமிறங்கியது. கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள்தான் ஆகின்றன.
அதற்குள்ளாக இமாலய சாதனை ஒன்றை ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் படைத்து விட்டது. இந்தியாவில் 1 லட்சம் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை என்பதுதான் அந்த சாதனை. மிகவும் குறைவான விலையில் களமிறக்கப்பட்டிருப்பதுதான், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கிற்கு கிடைத்துள்ள மிக பிரம்மாண்டமான வரவேற்பிற்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.
ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) மற்றும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) ஆகிய பைக்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே J-Series பிளாட்பார்ம் அடிப்படையில்தான், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த பைக்கில் 349 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 6,100 RPMல் 20.2 PHP பவரையும், 4,000 RPMல் 27 NM டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸை ராயல் என்பீல்டு நிறுவனம் இணைத்துள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் கச்சிதமாகவும், இலகுவாகவும் உள்ளது. எனவே இதனை கையாள்வதும் எளிமையாக இருக்கும். ஒட்டுமொத்தத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பக்கம் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் வகையில் ஹண்டர் 350 பைக் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அர்ஜென்டினா, மெக்ஸிகோ, கொலம்பியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப விலை (Price) வெறும் 1.50 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் இதன் டாப் மாடலின் விலை 1.72 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் நிச்சயம் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.
ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் 2023 (Indian Motorcycle of the Year 2023) போன்ற விருதுகளை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல.