விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் கமல். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக இந்தியன் 2 படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தது. தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டரில் அப்டேட் கொடுத்துள்ளார்.
கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், எதிர்பாராதவிதமாக பல பிரச்சினைகளால் இந்தப் படம் பாதியிலேயே ட்ராப் ஆனது. ஆனால், தற்போது மீண்டும் தொடங்கப்பட்ட இந்தியன் 2 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத், திருப்பதியை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
ஒரு மாதமாக சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துவிட்ட ஷங்கர், அடுத்து வெளிநாடு பறக்கவிருப்பதாக கூறியிருந்தார். அதன்படி தைவான் நாட்டில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தைவான் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்கிரிப்ட் பேப்பருடன் ஷங்கர் நிற்கும் போட்டோவுடன் இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ப்ளு ஜூன்ஸ், டிஷார்ட், கேப் உடன் ஸ்டைலாக நிற்கும் ஷங்கரின் போட்டோ வைரலாகி வருகிறது.