திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் சனி பகவானை வணங்க உகந்த தலம்..!

நீதி, நேர்மைக்கான கிரகம் சனி பகவான். இவரைப் போல் யாராலும் கொடுக்கவும் முடியாது, கெடுக்கவும் முடியாது.
அதேபோல், நவகிரகங்களில் இவர் பாவ கிரகம் ஆவார். மந்தன், ரவி, புத்ரன், ஜடாதன், ஆயுள்காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி பகவான் சூரியனின் புதல்வராவார். சூரிய பகவானின் மனைவி சந்தியா தேவி, சூரியனின் வெப்பம் தாங்காமல் தனது நிழலான சாயா தேவியை விட்டுச் செல்ல, இவர்களுக்குப் பிறந்த புதல்வன்தான் சனி பகவான். இவரது மகன் குளிகன். ஒவ்வொரு நாளும் குளிகை நேரத்தில் எது செய்தாலும் வளரும் என்பது ஐதீகம்.

சனி பகவானின் வாகனம் காக்கை. இவருக்கு விருப்பமான மலர்கள் கருங்குவளை மற்றும் நீல நிற சங்கு புஷ்பம். காக்கைக்கு தினமும் அன்னமிடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், சனிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதும் ஏழரை சனியின் வீரியத்தை குறைக்கும் என்பர். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து, சனி பகவான் சன்னிதியில் நல்லெண்ணெய் தீபமேற்றி எள் அன்னம் நிவேதனம் செய்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம்.

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மாதத்தில் ஒரு முறை நல்லெண்ணெய், கருப்பு வஸ்திரம், கருப்பு உளுந்து ஆகியவற்றை தட்சணையுடன் இல்லாதவர்க்கு தானம் செய்ய சனி பகவானின் தோஷ வீரியம் குறையும்.

சனி பகவானின் பிடியில் சிக்கி இருப்பவர்கள் சிவபெருமான், விநாயகர், ஆஞ்சனேயர் போன்ற தெய்வங்களை தொடர்ந்து வழிபட, அதிக அளவில் பாதிப்பில்லாமல் வாழலாம். ஏழரை சனி நடப்பவர்கள் சனிக்கிழமை தோறும் ஆஞ்சனேயரை வழிபடலாம். அஷ்டம சனி நடப்பவர்கள் சிவன் கோயில் அர்த்த ஜாம பூஜைக்கு புஷ்ப கைங்கரியம் செய்வதும், பெண்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுத்து வருவதும் நல்ல பலனைத் தரும்.

முருகப்பெருமானுக்கு ஆடு வாகனமான கதை தெரியுமா?

கண்ட சனி எனப்படும் சனி ஏழாம் இடத்தில் இருப்பவர்கள் வசதி இல்லாதவர்கள் திருமணம் செய்யும்போது அவர்களுக்கு தாலி, புடைவை, வேஷ்டி என வாங்கிக் கொடுப்பதும், தெய்வத் திருமணத்திற்கு கைங்கரியம் செய்வதும் நல்லது. அர்த்தாஷ்டம சனி எனப்படும் சனி நான்காம் இடத்தில் இருக்கும் சமயம் ஏழுமலையானை வழிபடுவது சிறப்பு. பெருமாள் கோயில்களில் உள்ள சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவதும், திருநள்ளாறு திருத்தலத்திற்கு சென்று வருவதும் சிறந்த பலனைத் தரும்.

திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் வட திருநள்ளாறு என்று போற்றப்படும் சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில் அருளும் சனி பகவானை வழிபடலாம். சென்னையில் உள்ள நவகிரக தலங்களில் சனி பகவானுக்குரிய தலம் இதுவாகும். அகஸ்தியர் பல வருடங்கள் பூஜித்த லிங்கம் இத்தலத்தில் உள்ளது சிறப்பு. பொங்கு சனி என போற்றப்படும் திருக்கொள்ளிக்காட்டில் கலப்பையுடன் கூடிய சனி பகவானை இத்தலத்தில் வணங்க, நம் இன்னல்கள் யாவும் விலகி, வாழ்வில் சந்தோஷம் பெருகும்.