சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தோழி பெண்கள் தங்கும் விடுதிகள் 11 தொடங்கப்பட்டுள்ளன என தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கியுள்ளார்.
இது குறித்து தமிழச்சி தங்கபாண்டியன், எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
பகிர்வதற்கு ஒரு நற்செய்தி:
தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதி
வெளியூரில் இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி மாவட்டங்களில் வந்து வேலை செய்து வரும் மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு “தோழி பெண்கள் தங்கும் விடுதி”..
தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி! – முழுவிபரம்
அமைந்துள்ள இடங்கள்: இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
வசதிகள்:
சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்ஓ வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது. குடும்பங்கள்/உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.
நேரம்:
இரவு 10:00 மணிக்குள் விடுதிக்கு வந்து விடவேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றார் போல விடுதிக்கு வரலாம்.
கூடுதல் விவரங்களுக்கு:
தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். techexe@tnwwhcl.in என்ற இணையதள முகவரியின் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம், மேலும் தேவையான விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
முழுமையான விவரங்களுக்கு:
https://tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற தகவல்களையும் பெறலாம். For புக்கிங்
https://tnwwhcl.in/hostel-details என்ற இணையதளத்தில் புக் செய்யலாம் என தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
படித்துவிட்டு வேலை தேடி சென்னைக்கு வரும் பெண்களுக்கு பெரிய பிரச்சினை தங்கும் இடம்தான். வீட்டை வாடகைக்கு எடுத்தாலும் வாடகை கேட்டாலே தலை சுற்றும் அளவுக்கு விலை இருக்கும். 2, 3 பெண்களுடன் தங்கிக் கொள்ளலாம் என்றாலும் கரன்ட் பில், தங்கும் வாடகை, உணவுக்கான செலவு, போக்குவரத்து செலவு என மாத சம்பளத்தில் 90 சதவீதம் சென்றுவிடும்.
இதனால் பிஜி ஹாஸ்டலில் மாத வாடகைக்கு தங்குகிறார்கள். அங்கு ரூ 8 ஆயிரத்திற்கு உணவுடன் கூடிய தங்குமிடங்கள் கிடைக்கும். ஏசி, லாண்டரி வசதிகள் தேவைப்பட்டால் ரூ 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவாகும். இது குறைந்த சம்பளக்காரர்களுக்கு செட் ஆகாது. இந்த நிலையில்தான் முதல் தலைமுறை பட்டாரி பெண்கள் சென்னை உள்பட தமிழகத்தின் பிற நகரங்களுக்கு வேலைக்கு தேடி வரும் போது அவர்கள் தங்குவதற்காக மகளிர் தங்கும் விடுதிகள் குறைந்த வாடகையில் அமைக்க அரசு அறிவித்தது.
அதன்படி தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் மகளிர் விடுதிகள் அமைக்கப்படுகின்றன. மாதம் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பாதிக்கும் பெண்கள் சென்னையில் 300 ரூபாய் வாடகையில் பாதுகாப்பான அதே நேரத்தில் அதிக வசதிகள் கொண்ட அரசு விடுதியில் தங்கலாம். அவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
சென்னை தவிர பிற இடங்களில் மாத வாடகை ரூ 200 வசூலிக்கப்படும். உணவு, மின்சாரம் உள்ளிட்டவை தங்கும் பெண்களிடையே பகிர்ந்து பெறப்படும். தங்கும் விடுதி ஊழியர்களுக்கான ஊதியத்தை அரசு தரும்.