சென்னையில் இன்று தக்காளியின் விலை அதிரடியாக குறைந்தது. கிலோவுக்கு ரூ.25 வரை விலை குறைந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலையும் ரூ.20 சரிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை கூட விற்பனையானது. அதேபோல் இஞ்சி, சின்ன வெங்காயத்தின் விலைகளும் எகிறின.
இதனால் அனைத்து தரப்பு மக்களும் பிரச்சனையை எதிர்கொண்டனர். மத்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசும் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளன. தமிழ்நாட்டில் அரசு சார்பில் ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தோட்டக்கலைத்துறை சார்பில் நேரடியாகவும், வாகனங்களிலும் சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை ஓரளவு குறைந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய தினத்தை ஒப்பிடும்போது இன்று தக்காளியின் விலை குறைந்துள்ளது.
அதாவது நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.125க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தான் இன்று தக்காளியின் விலை ரூ.25 வரை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு 550 டன் தக்காளி வந்ததால் அதன் விலை கணிசமாக குறைந்துள்ளது. வரும் நாட்களில் தக்காளி வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் இன்னும் கூட விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது பொதுமக்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
மேலும் தக்காளியை போல் அன்றாட சமையலில் முக்கிய பொருளாக உள்ள சின்ன வெங்காயத்தின் விலையும் சரிந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.180க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று ரூ.20 குறைந்து ஒரு கிலோ வெங்காயம் ரூ.160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை அதிகமாக இருந்த நிலையில் இன்ற பெரிய அளவில் சரிந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.