‘டொராண்டோவின் நைட்டிங்கேல்’ என இந்திய – கனடிய மக்களால் கொண்டாடப்படுபவர், ஜொனிதா காந்தி.
புதுடெல்லியில் பிறந்து, டொராண்டோவில் கனடிய கலாச்சாரத்தில் வலுவான தாக்கங்களுடன் வளர்ந்தவரான இவர், இந்திய பாரம்பரியத்துடனான தனது நெருங்கிய தொடர்பை இன்றளவும் மிக கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பவர்.
2015-ல் ஏ.ஆர்.ரஹ்மானின் வட அமெரிக்கன் இண்டிமெட் டூர் தொடரில் முன்னணி பெண் பாடகராக ஜொனிதா காந்தி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு சிறப்பு நேரடி நிகழ்ச்சிக்காக,பத்து தடவை கிராமி விருது பெற்ற இசைக் கலைஞர் கார்லோஸ் சந்தனாவுடன் இணைந்து பணியாற்றியவர்தான் இந்த ஜொனிதா காந்தி.
பிரபல பாடகியாக வலம் வரும் இவர் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமின்றி பஞ்சாபி, பெங்காலி, தமிழ், ஜெர்மன், இத்தாலியன் மற்றும் பிரஞ்சு ஆகிய மொழிகளில் பாடி வருகிறார்.
பாலிவுட்டின் இசை இரட்டையர்களான விஷால் – சேகரின் சென்னை எக்ஸ்பிரஸுக்காக இவர் பாடிய தலைப்பு பாடலான ‘உன்னை மறக்க முடியாது…’ இன்றளவும் இசை ரசிகர்களால் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.
பல ஹிட் பாடல்களை பாடி பிரபல பின்னணி பாடகியாக வலம் வரும் இவர், தமிழில் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம்பெற்ற ‘மெண்டல் மனதில்…’ பாடல் மூலம் அறிமுகமானவர்.
விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் இவர் பாடிய ‘ஹலமித்தி ஹபிபோ…’ பாடல், உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான இசை ரசிகர்களை தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘டான்’ படத்தில் இடம்பெற்ற ‘பிரைவேட் பார்ட்டி…’ பாடலை பாடியதும் இவர்தான்.
ஒரு பக்கம் பாடகியாக கலக்கி வந்தாலும், அவ்வப்போது ஃபோட்டோ ஷூட்டில் பங்கேற்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஜொனிதா காந்தி.