கலவை சாதங்களில் மிகவும் எளிமையாக செய்யக்கூடியது தேங்காய் சாதம். அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் மதிய உணவிற்கு எடுத்துச் செல்லும் சுவையான உணவு வகைகளுள் இதுவும் ஒன்று.
இதற்கு மினி லன்ஞ் பாக்ஸ் சாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் சுவையான இனிப்பு தேங்காய் சாதம் எப்படி செய்வது என்பதை பற்றி இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
சாதம் – 1 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
தேங்காய் பால் – 2 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய், கிராம்பு, நெய், முந்திரி பருப்பு, பாதாம் – தேவையான அளவு
செய்முறை:
அரிசியை சாதமாக (உதிரி உதிரியாக இருக்குமாறு) தயார் செய்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் அல்லது எண்ணெய் தேவையான அளவு விட்டு முந்திரி, பாதாம் ஆகியவற்றை சேர்த்து நல்ல பொன்னிறமாக தாளித்துக் கொள்ளவும். பின்னர் அதை தனியாக எடுத்துவைத்து கொள்ளவும்.
தொடர்ந்து துருவிய தேங்காயை வறுத்து, சீனியை சேர்த்து பூரணமாக்கவும். பின்னர் வறுத்த தேங்காய் துருவலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ஏலக்காய், கிராமை தாளித்து பின்னர் சூடான சாதம் மற்றும் இரண்டு கப் தேங்காய் பாலை போட்டு நன்றாக வேகவைக்கவும். அதில், தேங்காய் துருவல், வறுத்த முந்திரி, பாதாம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடவும். சிறிது நேரத்தில் சுவை மிக்க இனிப்பு தேங்காய் சாதம் ரெடி..!
பொதுவாக தேங்காய் சாதம் தயார் செய்வதற்கு தேங்காய் தேர்வு மிக முக்கியமானது. நல்ல முற்றிய தேங்காயை தேர்வு செய்யவும். விருப்பம் உள்ளவர்கள் நெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். தேங்காய் துருவலின் அளவு சாதத்தின் அளவுக்கு சமமாக இருக்குமாறு எடுத்துக்கொண்டால் தேங்காய் சாதம் சுவையாக இருக்கும். இனிப்பு தேங்காய் சாதம் சத்துக்கள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.