தொழிலதிபர் எலான் மஸ்க் விரும்பியபடியே, டிவிட்டர் லோகோவை மாற்றி உள்ளார். நீலக் குருவிக்கு பதிலாக கறுப்பு வெள்ளை நிற எக்ஸ் (X) லோகோவை அறிமுகம் செய்துள்ளார். இதற்கு அதிருப்தி விமர்சனங்களே அதிகளவில் எழுந்துள்ளன. டிவிட்டர் சமூக ஊடக தளத்தை, உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து விலைக்கு வாங்கினர். அதன்பிறகு அவர் பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில், டிவிட்டரின் பாரம்பரியமான லோகோவை மாற்றப் போவதாக நேற்று முன்தினம் டிவிட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்காக புதிய லோகோவை பரிந்துரைக்குமாறு டிவிட்டர் பயனாளர்களிடம் மஸ்க் கேட்டிருந்தார்.
இந்நிலையில், மஸ்க் விரும்பியபடியே அவருக்கு விருப்பமான கறுப்பு வெள்ளை நிற எக்ஸ் (X) எழுத்து புதிய லோகோவாக நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக இணையளதள டிவிட்டர் கணக்குகளுக்கு இந்த லோகோ மாற்றப்பட்டது. மொபைல் போன்களில் டிவிட்டர் லோகோவாக நீலக் குருவி நீடித்தது. விரைவில் அனைத்து குருவிகளுக்கும் விடைகொடுப்பதாக கூறி இருக்கும் மஸ்க், டிவிட்டரை மொத்தமாக ரீபிராண்டிங் செய்யும் திட்டத்தில் இருக்கிறார். இதற்காக கடந்த 1999ல் தொடங்கிய X.com டொமைனை இப்போது twitter.com-க்கு திருப்பி விட்டுள்ளார்.
அதே போல இனி டிவிட் என்பது Xs என அழைக்கப்படும் என்றும் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் பயனாளர்கள் மத்தியில் பெரும்பாலும் அதிருப்தியையே ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் மெட்டா நிறுவனம் திரட்ஸ் எனும் புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகப்படுத்தியது. இது டிவிட்டர் பயனாளிகளை குறிவைத்து தொடங்கப்பட்டது என்பதால் போட்டியை சமாளிக்க மஸ்க் இன்னும் பல அதிரடி மாற்றங்களை செய்ய திட்டமிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நிதி சார்ந்த சேவை உட்பட அனைத்து சேவைகளும் தரும் ஒரே ஆப் ஆக டிவிட்டரை மாற்ற திட்டமிட்டுள்ளார்.
எக்ஸ்-சில் என்னதான் இருக்கு? மஸ்க் தனது விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் என்றே பெயரிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர் தொடங்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்திற்கு XAI என பெயரிட்டுள்ளார். தனது ஒரு மகனுக்கு X AE A-XII என புரியாதபடி பெயரிட்டுள்ளார். 1999ல் இவர் தொடங்கிய நிதி சேவை நிறுவனத்திற்கு X.com என பெயரிட்டார். இதுதான் பின்னாளில் பேபால் நிறுவனமானது. இப்படி அனைத்தையும் X ஆக்குவதை விரும்பும் மஸ்க் டிவிட்டரையும் அப்படியே மாற்றிக் கொண்டிருக்கிறார்.