38 மாடி குடியிருப்பு மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன்....

ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள 38 மாடிகள் கொண்ட கட்டடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். கடந்த சில தினங்களாக ரஷ்ய ராணுவ படைகளுக்கு, உக்ரைன் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. நவீன ராணுவ தளவாடங்களோ, நிதி வசதியோ இல்லாத உக்ரைன் ராணுவத்தை போர் தொடங்கிய சில நாட்களிலேயே பின்னுக்குத் தள்ளி ரஷ்யா முன்னேறியது. உக்ரைன் நாட்டின் சில மாநிலங்களை ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில் தான், தற்போது உக்ரைன் ராணுவம் ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்து கொண்டே வருகிறது.

சமீபத்தில், ரஷ்யாவின் குர்ஸ்க் மாநிலத்தில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது உக்ரைன் ராணுவம். ரஷ்ய மக்களின் 74 குடியேற்ற பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளது என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியும் உறுதி செய்தார். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 26) ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள 38 மாடிகள் கொண்ட கட்டடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

அதிவேகத்தில் வந்த ட்ரோன் அடுக்குமாடி கட்டடம் மீது மோதி வெடித்து சிதறியது. அந்த கட்டடங்களில் இருந்து புழுதிகள் கிளம்பியதை கண்டு பகுதிமக்கள் பீதி அடைந்தனர். பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 38 மாடி கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் போல் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக இணையத்தில் விமர்சனங்கள் பரவி வருகின்றன.