கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 யாருக்கெல்லாம் வழங்கப்படும்!

கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவதற்காக தகுதியான குடும்ப தலைவிகள் யார் யார் என்ற விவரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக கொடுத்த மிகப்பெரிய வாக்குறுதிகளில் ஒன்று குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படும் என்பது. இந்த திட்டம் தேசிய அளவில் ஹிட் அடித்து உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில்தான் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருந்தது. கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் இருந்தது. இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியானது.

பயன் பெறுபவர்கள்

• குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.

• ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி விண்ணப்பிக்கலாம்.

• குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் என குறிப்பிட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.

• குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த குடும்பத் தலைவரின் மனைவி, குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.

• திருமணம் ஆகாத தனித்த பெண்கள்; கைம்பெண்கள் & திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்ப தலைவிகளாகக் கருதப்படுவர்.

• ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதேபோல் திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்

தகுதி பெறாதவர்கள்

• குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.

• மாநில, மத்திய அரசு ஊழியர்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள்/ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்

• ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள் சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்

• ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்