ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘பதான்’ திரைப்படத்தின் டிரெய்லர் 10.01.2023 அன்று வெளியாகி உள்ளது. தமிழில் இப்படத்தின் டிரெய்லரை தளபதி விஜய் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர். ஷாருக்கான் கடந்த சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். கடந்த வருடம் தான் அட்லி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘ஜவான்’ நடிக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் ‘டங்கி’ ஒரு படமும் கமிட் ஆனார்.
இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன ‘வார்’ படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘பதான்’ படத்தில் நடிக்க கமிட் ஆனார்.
இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
இந்த படம் யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50 வது படமாக உருவாகியுள்ளது. மறைந்த பிரபல இந்தி இயக்குனர் யாஷ் சோப்ராவால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆகும். பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று ‘பதான்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. தமிழில் இப்படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் வெளியிட்டிருக்கிறார். இது குறித்து விஜய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பதான் படத்துக்காக ஷாருக்கான் சார் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்” என விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தின் டிரெய்லரையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரெய்லர் தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.