80வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றினார் விக்னேஷ்..!

இந்தியாவின் 80வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்னேஷ் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மனியில் 24வது நார்ட் வெஸ்ட் 2023 செஸ் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்னேஷ் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த லிஜா ஸ்னெடைருடன் மோதினர். போட்டி தொடங்கியது முதல் ஆதிக்கத்தை நிலைநாட்டிய விக்னேஷ் ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினார். இதையடுத்து, அவர் லிஜா ஸ்னெடைரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த வெற்றி மூலம் அவரது ரேட்டிங் 2500 புள்ளிகளை கடந்தது. இதன்மூலம் இந்தியாவின் 80வது கிராண்டமாஸ்டர் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ள விக்னேஷின் சகோதரர் விசாக்கும் செஸ் சாம்பியன் ஆவார், அவர் கடந்த 2019ம் ஆண்டு கிராண்ட்ஸ்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றி, கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றிய 59வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்தியாவிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றிய சகோதரர்கள் விசாக் – விக்னேஷ் மட்டுமே ஆவார்கள் என்பது தனிச்சிறப்பு ஆகும். கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற விக்னேஷ் இதற்கு முன்பாக தேசிய அளவில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியிருந்தார்.

உலகை வெல்வோம்

இந்தியாவின் கடைசி மூன்று கிராண்ட்மாஸ்டர்களும் பதின்ம வயது சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் 78வது கிராண்ட்மாஸ்டர் கௌஸ்தவ் சாட்டர்ஜி 19 வயதிலும், பிரனேஷ் 16 வயதிலும் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றி அசத்தினர்.

தனது தம்பியின் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த விசாக், “எனது சகோதரர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியது மிகவும் அருமையானது. அவரது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முன்னோக்கி செல்ல இது முதற்படியாக இருக்கலாம. எங்களது ஆட்டத்திறனை வளர்த்துக்கொண்டு உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துவோம்.” என்றார்.

வெற்றிவாகை சூடுவோம்

விசாக் மற்றும் விக்னேஷ் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை முதன்முதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றினார். இதுவரை கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றிய 80 பேர்களில் 28 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.