மீண்டும் இயக்குநர் மணிகண்டனுடன் இணையும் விஜய் சேதுபதி..!

‘கடைசி விவசாயி’ படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘ஃபார்ஸி’ இணையத் தொடரில் ஷாஹித் கபூருடன் இணைந்து நடித்தார். இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் தமிழில்  தன்முறையாக நடிக்கும் வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் மணிகண்டன் இந்த சீரிஸை இயக்குகிறார்.

‘கடைசி விவசாயி’ படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ளது. இந்த வெப் சீரிஸிற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். B.அஜித் குமார் படத்தின் எடிட்டராகவும், இம்மானுவேல் ஜாக்சன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். வெப் சீரிஸின் ஒலி வடிவமைப்பை அஜயன் K அடாத் மற்றும் ஆடை வடிவமைப்பை கவிதா கையாள்கின்றனர். இதில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ள சீரிஸில் நடிப்பது மகிழ்ச்சி என்றும் இது நேரடியாக தான் நடிக்கும் முதல் தமிழ் வெப் சீரிஸ் என்றும் தெரிவித்துள்ளார்.