விகடன் விருதுகள் 2022

சிறந்த வெப்சீரிஸ் – ‘விலங்கு’

தமிழின் முழுமுதல் வெகுஜன வெப்சீரிஸ். த்ரில்லரில் ஆங்காங்கே காமெடி தூவி சுடச்சுட தீயிலிட்டு வார்த்தெடுத்தபோது புடமிட்ட தங்கமாய் வெளிப்பட்டது ‘விலங்கு.’ தமிழ் ஓ.டி.டி வெளியின் வெற்றிக் கையேடு ‘விலங்கு’!

சிறந்த அனிமேஷன் விஷுவல் எஃபெக்ட்ஸ் – ‘NY VFXWAALA’ (பொன்னியின் செல்வன்-1)

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கணக்கற்ற மாயாஜாலங்கள் நிகழ்த்திய இந்தத் தொழில்நுட்பக் குழுவை அங்கீகரிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது ஆனந்த விகடன்!

சிறந்த ஆடை வடிவமைப்பு – ‘ஏகா லக்கானி’ (பொன்னியின் செல்வன்-1)

வரலாற்றுப் புதினங்களில் வரும் மனிதர்களை அப்படியே திரையில் வார்ப்பதில் இருக்கும் சவால்கள் எக்கச்சக்கம். ஆனால் அதைத் தனக்கே உரிய பக்குவத்தோடு கையாண்டிருந்தார் ஏகா லக்கானி.

சிறந்த ஒப்பனை – ‘விக்ரம் கெய்க்வாட்’ (பொன்னியின் செல்வன்-1)

வாசிப்பு அனுபவத்திற்கு சற்றும் குறையாமல் அவற்றின் கதைமாந்தர்களை திரையில் உலவவிடும் சவாலில் சாதித்தவர்கள் இந்திய அளவிலேயே மிகச்சிலர்தான். அதில் இந்தத் தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் விக்ரம் கெய்க்வாட்.

சிறந்த கலை இயக்கம் – ‘தோட்டாதரணி’ (பொன்னியின் செல்வன்-1)

பழுவேட்டரையர்களின் நோக்கம் போலவே இருளடர்ந்த மாடமாளிகை, சோழர்களின் பிரதாபம் பேசும் போர்க்களங்கள் என பொன்னியின் செல்வனில் தன் தங்க முத்திரைகளைப் பதித்து வைத்திருந்தார் தோட்டா தரணி!

சிறந்த நடன இயக்கம் – ‘ஜானி’ (மேகம் கருக்காதா, திருச்சிற்றம்பலம்)

மங்கிய தெருவிளக்கின் கீழே நிலா சாட்சியாய் திருவும் ஷோபனாவும் கீபோர்டின் மெல்லின ரேகைகள் எழுப்பும் இசைக்குறிப்பிற்கு தங்கள் கால்களால் தாளமிட்டபோது மொத்த மாநிலமும் நெகிழ்ந்து ஹார்ட்டின்கள் விட்டது!

சிறந்த சண்டைப்பயிற்சி – ‘திலீப் சுப்பராயன்’ (வலிமை)

‘பைக் ஸ்டன்ட்கள் ஹாலிவுட்டுக்கானவை மட்டுமே’ என எழுதப்பட்டிருந்த நிரந்தர பட்டயத்தைக் கிழித்தெறிந்து பட்டையைக் கிளப்பினார் திலீப். இப்போது அதே பாதையில் விர்ரென ஆக்ஸலரேட்டர் முறுக்கி முன்னேறுகிறது தமிழ் சினிமா.

சிறந்த படத்தொகுப்பு – ‘பிரதீப் இ.ராகவ்’ (லவ் டுடே)

ஜம்ப் கட்டோ, ஸ்ப்ளிட் கட்டோ, எதுவாக இருந்தாலும் அதன் அடிநாதமாய் காமெடி இழையோடுவதை கவனமாய்ப் பார்த்துக்கொண்ட பிரதீப் ராகவின் கடமையுணர்ச்சி படம் முழுக்க ஒளிர்ந்துகொண்டே இருந்தது.

சிறந்த ஒளிப்பதிவு – ‘ரவி வர்மன்’ (பொன்னியின் செல்வன்-1)

திரையில் ஒரு பேரபனுவத்தைப் பரிசளித்த ரவி வர்மன், கோலிவுட்டைத் தன் வண்ணங்களால் வாழ்த்தும் வானவில்.

சிறந்த பின்னணிப் பாடகி – ‘மதுஸ்ரீ’ (மல்லிப்பூ, வெந்து தணிந்தது காடு)

மனித உணர்வுகளுக்கெனக் குரல் இருந்தால், அதில் ஏக்கத்தின் குரல் நிச்சயம் மதுஸ்ரீயினுடையதாகத்தான் இருக்கும். ‘மல்லிப்பூ’ பாடல் வழியே அவர் நிகழ்த்தியது இரு காதல் மனங்களுக்கு இடையேயான உரையாடல்!

சிறந்த பின்னணிப் பாடகர் – ‘ஏ.ஆர். ரஹ்மான்’ (மறக்குமா நெஞ்சம், வெந்து தணிந்தது காடு)

‘அடங்காத ராட்டினத்தில்’ என அவர் சாரீரம் உச்சம் தொடும்போது, புவி ஈர்ப்பு விதிகளை எல்லாம் ஏமாற்றி விண்ணில் பறந்தன லட்சோப லட்சம் மனங்கள்.

சிறந்த பாடலாசிரியர் – ‘விவேக்’ (அன்பரே, குளுகுளு / சண்ட வீரச்சி, கட்டா குஸ்தி)

கூடலின் இதம், இருத்தலின் யதார்த்தம், ஊடலின் அணைப்பு, பிரிவின் காயம், இரங்கலின் வலி என ஐந்திணைகளின் கூற்றை ஐந்தே நிமிடப் பாடல்வரிகளில் நமக்குக் கடத்திய அன்பர் விவேக்.

சிறந்த குழந்தை நட்சத்திரம் – ‘ஹியா தவே’ (நானே வருவேன்)

தொடக்கத்தில் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தி, போகப் போக மெதுவாய் பய கிராஃபை ஏற்றி இடைவேளைக் காட்சியில் அமானுஷ்யச் சிரிப்போடு அவர் கேமராவைப் பார்த்து வெறிக்கையில் முதுகுத்தண்டெல்லாம் சில்லிட்டது.

சிறந்த வசனம் – ‘தமிழரசன் பச்சமுத்து’ (நெஞ்சுக்கு நீதி)

ரீமேக் படங்கள் என்பவை அப்படியே அதை மொழிபெயர்ப்பதல்ல, அழுத்தமான வசனங்களின் மூலமாக அதை அடுத்தகட்டத்திற்கு உயர்த்திப்போக முடியும் என நிரூபித்துக்காட்டினார் தமிழரசன் பச்சமுத்து.

சிறந்த கதை – ‘தீபக், முத்துவேல்’ (விட்னஸ்)

மலக்குழி மரணங்கள் என்னும் அநீதி செய்திகளாய் மட்டுமே கடந்து கவனம் கலைத்த நிலையில், அதைக் கதையாய் மாற்றி, வலிமையான திரைப்படமாக உருவாக்கிப் பார்வையாளர்களை உலுக்கினார்கள் தீபக்கும் முத்துவேலும்.

சிறந்த திரைக்கதை – ‘ஹரிஹரன் ராஜு, கௌதம் ராமசந்திரன்’ (கார்கி)

கொஞ்சம் பிசகினாலும் அரசியல் தவறாய்ப் புரிந்துக்கொள்ளப்பட்டுவிடும் சாத்தியக்கூறுகள் உள்ள கதையைச் சொல்ல முனைந்த துணிவும், அது அனைவரையும் சென்று சேரும்படி லாகவமாகத் திரைக்கதை அமைத்த இவர்களின் சமூகப் பொறுப்புணர்வு பாராட்டுதலுக்குரியது.

சிறந்த குணச்சித்திர நடிகை‘கீதா கைலாசம்’ (நட்சத்திரம் நகர்கிறது)

படம் நெடுகத் தோன்றித்தான் பார்ப்பவர்களுக்குத் தாக்கத்தை உண்டாக்க வேண்டும் என்பதில்லை. சில நிமிடங்களேயானாலும் அதை ஆர்ப்பாட்டமாய்ச் செய்துவிட முடியும் என்பதை ‘நட்சத்திரம் நகர்கிறது’ வழியே மேடை போட்டுச் சொன்னார் கீதா கைலாசம்.

சிறந்த குணச்சித்திர நடிகர் – ‘காளி வெங்கட்’ (கார்கி)

சிறைக்கும் நீதிமன்றத்துக்குமாய் அல்லாடும்போது, கழிப்பறையில் சீனியரின் ஏச்சுகளை எதிர்கொண்டு நிற்கும்போது எனக் காட்சிக்குக் காட்சி நாம் கண்டு வளர்ந்த/கடந்துவந்த நடுத்தர வர்க்கத்து இளைஞரின் அத்தனை குணாதிசயங்களையும் பிரதிபலித்து அசரடித்தார்.

சிறந்த வில்லி – ‘ஐஸ்வர்யா ராய்’ (பொன்னியின் செல்வன்-1)

அழகும் அறிவும் ஒருசேரப் பெற்ற நந்தினிக்கு திரையில் ஐஸ்வர்யா ராயைத் தவிர வேறு யாரும் பொருந்தியிருக்க முடியாது!

சிறந்த வில்லன் – ‘லால்’ (டாணாக்காரன்)

அதிகாரத்திற்கென ஒரு நிரந்தர உருவம் கிடையாது. காலத்திற்கேற்றாற்போல அதன் கருவிகள் மாறிக்கொண்டே இருக்கும். திரையில் அதே அதிகார ஆணவத்திற்கென ஒரு முகம் கொடுத்தால் அதுதான் ‘டாணாக்காரர்’ ஈஸ்வரமூர்த்தி.

சிறந்த நகைச்சுவை நடிகர் – ‘யோகி பாபு’ (லவ் டுடே)

காமெடியோ, காதலோ, அரசியல் கருத்தோ, குணச்சித்திர வேடமோ… இயக்குநர்களின் கதை முன் நகர இன்றைய தேதியில் தேவை யோகிபாபு எனும் சாரதி!

சிறந்த அறிமுக இயக்குநர் – ‘தமிழ்’ (டாணாக்காரன்)

திமிரும் தோரணையுமான அந்தச் சீருடைக்குப் பின்னால் புழுங்கும் ரத்தமும் சதையுமான மனங்கள்மீதும், அவை எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள்மீதும் வெளிச்சம் பாய்ச்சி, தமிழ் கொண்டுவந்தது தனித்துவமான கவன ஈர்ப்புத் தீர்மானம்!

சிறந்த அறிமுக நடிகை – ‘அதிதி ஷங்கர்’ (விருமன்)

‘தந்தையின் பெயருக்குக் கிடைத்த பரிசு அல்ல இது, தன் திறமைக்குக் கிடைத்த மரியாதை’ என விருமனில் காட்சிக்குக் காட்சி நிரூபித்திருந்தார் அதிதி!

சிறந்த அறிமுக நடிகர் – ‘கிஷன் தாஸ்’ (முதல் நீ முடிவும் நீ)

விட்டேத்தியான விடலைப் பருவம், பொறுப்பான பின்னிருபதுகள் என முதல் படத்திலேயே இரண்டு நேரெதிர் குணங்களைத் தூக்கிச் சுமக்க வேண்டிய வேலை. இரு துருவங்களுக்குமிடையே இருக்கும் தூரத்தைப் போல அதை அழகாய் வேறுபடுத்திக் காட்டினார்.