இயக்குனராக அறிமுகமாகும் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நடிகர் விஷால், இயக்குனர் மிஷ்கினுக்கும் நன்றி தெரிவித்து உள்ளார்.
தமிழ் திரையுலகில் ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி வருபவர் விஷால். செல்லமே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிநடை போட்டு வருகிறார். கோலிவுட்டில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள விஷாலுக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஐடியாவே இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் அது தான் உண்மை. சினிமாவில் எப்படியாவது இயக்குனராகிவிட வேண்டும் என்பது தான் விஷாலின் கனவாக இருந்துள்ளது.
இதற்காக அவர் முதன்முதலில் நடிகரும், இயக்குனருமான ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் படம் இயக்க முயன்றும் முடியாமல் போனதால், வேறு வழியின்றி ஹீரோவாக அறிமுகமானார். அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதால் தொடர்ந்து ஹீரோவாகவே பயணித்து வந்த விஷாலுக்கு, எப்படியாவது இயக்குனராகிவிட வேண்டும் என்கிற ஆசை மட்டும் குறையாமல் இருந்து வந்தது.
தற்போது ஒரு வழியாக அவரது 25 வருட கனவு நனவாகி இருக்கிறது. அவர் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டிருந்த துப்பறிவாளன் 2 படத்திற்கான பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கிறார். தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ள விஷால், கையோடு துப்பறிவாளன் 2 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி உள்ளார். முதற்கட்டமாக லண்டனுக்கு சென்றுள்ள அவர் அங்கு லொக்கேஷன் தேடும் பணிகளில் இறங்கி இருக்கிறார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு நெகிழ்ச்சி உடன் பேசி உள்ள விஷால், தன்னுடைய குருநாதரான அர்ஜுனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதோடு, ஒரு இயக்குனராக அவரின் பெயரை காப்பற்றுவேன் என்றும் உறுதியளித்துள்ளார். இறுதியாக இயக்குனர் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்துள்ள விஷால், அவரின் குழந்தையை தத்தெடுத்திருக்கிறேன் கண்டிப்பாக கைவிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
துப்பறிவாளன் 2 படம் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி பாதியில் கைவிடப்பட்டது. விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கினை அதிரடியாக நீக்கினார் விஷால். இப்படத்தின் தயாரிப்பாளரும் விஷால் தான். மிஷ்கின் எழுதிய கதையை தான் விஷால் இயக்க உள்ளதால் அவருக்கு நன்றி தெரிவித்து அந்த வீடியோவில் பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.