ஓய்வு காலத்தில் பென்ஷன் பெற வேண்டுமா?

உடலில் ஆற்றலும், உள்ளத்தில் ஆர்வமும் இருக்கும் வரை நாம் ஓய்வின்றி ஓடியாடி உழைத்து கொண்டிருக்கிறோம். அதே சமயம், ஓய்வுகாலத்தில் நம் மனதில் ஆர்வம் இருந்தாலும், பெரும்பாலும் உடல் ஒத்துழைக்காது அல்லது அந்த சமயத்தில் நமக்கு வேலை இருக்காது. இருப்பினும், ஓய்வுகால வாழ்க்கையில் நாம் நிம்மதியாக வாழுவதற்கான முன் ஏற்பாடுகளை நாம் பணி செய்யும் காலத்திலேயே செய்து வைத்துக் கொள்ள வேண்டும். எந்த வருமானமும் இல்லாத ஓய்வு காலத்திற்கு தேவையான நிதி பாதுகாப்பை நாம் இப்போதே செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் மட்டும்தான் நாம் நினைத்தபடி சௌகரியமான வாழ்க்கையை வாழ முடியும்.

ஓய்வுகால திட்டங்களை தீர்மானித்துக் கொள்ளுங்கள் :

வேலை செய்யும் காலத்தில் நம் கையில் பணம் இருந்தாலும் நாம் நினைத்தபடி வாழ்க்கையை தகவமைத்து கொள்ள வாய்ப்பு இருக்காது. ஆனால், ஓய்வுகால வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நம்மால் திட்டமிட முடியும். குறிப்பாக வாழ்க்கையின் பெருங்கனவாக இருக்கும் சொந்த வீடு, பிள்ளைகளின் திருமணங்கள் போன்றவற்றை மேற்கொள்ளலாம். அதேபோல சுற்றுலா செல்வதற்கு அதிக நேரம் செலவிடலாம். அத்தியாவசியமான மருத்துவ தேவைகளையும் கூட கவனிக்க வேண்டியிருக்கும்.

உங்கள் தேவைகள் என்ன?

தற்போதைய சூழலில் உங்கள் செலவுகள் என்னென்ன, எதிர்காலத்தில் உங்கள் செலவுகள் எவ்வளவு இருக்கும் என்பதை நீங்கள் கணிக்க வேண்டும். குறிப்பாக பணவீக்கம், மருத்துவச் செலவுகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படும் செலவினங்கள் ஆகியவற்றை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முன்கூட்டியே திட்டமிட்ட சேமிப்பு

வருமானம் அதிகமாக இருக்கும்போதே நம் பிற்கால தேவைகளுக்காக பணத்தை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு பலன் கிடைக்கும் என்பதை நாம் கணித்து, அதிக பலன் தரக் கூடிய திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம்.

ஓய்வுகால சலுகைகள்

ஓய்வுகாலத்திற்கான சலுகைகளுடன் கூடிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு தேசிய சேமிப்புச் சான்று திட்டம், பிபிஎஃப் திட்டம், ஈபிஎஃப் திட்டம் போன்றவை நமக்கு கை கொடுக்கும். குறிப்பாக சில திட்டங்களில் செய்யும் முதலீடுகளுக்கு வரிச் சலுகை கிடைக்கும்.

ஈக்குவிட்டி முதலீடு

ஓய்வுகால வாழ்க்கைக்கு நிதிப் பாதுகாப்பை ஏற்படுத்திடும் வகையில் ஈக்குவிட்டி திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம். ஈக்குவிட்டி தொடர்புடைய சேமிப்புத் திட்டங்களையும் நீங்கள் பரிசீலிக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்

பரிசீலனை

மாற்றம் பெறும் உங்கள் தேவைகள் மற்றும் மார்க்கெட் நிலவரம் ஆகியவற்றை பொருத்து, உங்களுடைய முதலீட்டுத் திட்டங்களை நீங்கள் மறுபரிசீலனை செய்யலாம். தேவைப்படும் பட்சத்தில் நிதி ஆலோசகரின் உதவியை நாடலாம்.

மருத்துவச் செலவுகளுக்கு திட்டமிடல்

உங்கள் வயதுக்கு ஏற்றபடி நோய்களும் தேடி வரக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை தேர்வு செய்யலாம்.

அரசுத் திட்டங்கள்

அடல் ஓய்வூதிய திட்டம், பிரதம மந்திரி ஓய்வூதியத் திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் என அரசு சார்பில் வழங்கப்படுகின்ற திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வது குறித்து பரிசீலனை செய்யலாம்.