கேரளாவின் வயநாட்டில், சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 19 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் அதேவேளையில் 400-கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. மீட்புக் குழுவினர் தீவிர பணிகளில் ஈடுபட்டு வரும் அதேவேளையில், பல இடங்களில் முக்கியமான பாலங்கள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதால் வாகனங்கள் அங்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதைப் பற்றி மிகவும் வேதனையடைந்தேன். இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதேசமயம், முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் தளவாட அல்லது மனிதவள ஆதரவை நமது சகோதர மாநிலமான கேரளாவுக்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது” என்று அறிவித்திருக்கிறார்.
கேரள மாநிலம் வயநாட்டில் தொடர் மழையின் தீவிரத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தேசிய சுகாதார இயக்கம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 9656938689 மற்றும் 8086010833 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.