இந்தியாவுடனான டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் மோதுவதற்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. முதல் ஆட்டத்துக்கான அணியில் இருந்த வீரா்களில், பேட்டிங் ஆல்-ரவுண்டா் ரேமன் ரீஃபருக்குப் பதிலாக, பௌலிங் ஆல்-ரவுண்டா் கெவின் சின்கிளோ சோக்கப்பட்டுள்ளாா். வேறு எந்த மாற்றமும் அணியில் மேற்கொள்ளப்படவில்லை. 7 ஒரு நாள், 6 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் ஸ்பின்னரான சின்கிளோ, இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் களம் காணவில்லை. 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி கண்டுள்ளது.
போா்ட் ஆஃப் ஸ்பெயினில் வியாழக்கிழமை தொடங்கும் 2-ஆவது ஆட்டம், இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 100-ஆவது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. அணி விவரம்: கிரெய்க் பிரத்வெயிட் (கேப்டன்), ஜொமெய்ன் பிளாக்வுட் (துணை கேப்டன்), அலிக் அதனாஸ், தேஜ்நாராயண் சந்தா்பால், ரகீம் காா்ன்வால், ஜோஷுவா டா சில்வா (வி.கீ.), ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டா், அல்ஜாரி ஜோசஃப், கிா்க் மெக்கன்ஸி, கெவின் சின்கிளோ, கெமா் ரோச், ஜோமெல் வாரிக்கன்.