பொதுவாக, எல்லா வகைப் பழங்களிலும் வைட்டமின், மினரல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நார்ச் சத்து, நீர்ச் சத்து போன்ற பல ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை.
இருந்தாலும், அவற்றில் சில வகைப் பழங்களை இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பு உண்பது, அவற்றிலிருந்து வெளிப்படும் நன்மைகளின் தாக்கம் எதிர்மறை வினையாக மாறி உடலுக்கு சில அசௌகரியங்கள் உண்டாக்க வாய்ப்பாகும். அந்த மாதிரியான 6 பழங்கள் எவை என்பதை இங்கு பார்க்கலாம்.
* ஆப்பிள் பழத்தில் நார்ச் சத்தும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன. இதிலுள்ள அசிடிக் (Acid) தன்மையானது, அஜீரணத்தையும் நெஞ்செரிச்சலையும் தரக்கூடியது. இதனால் ஆப்பிள் பழத்தை இரவில் தவிர்த்து பகலில் உண்பதே நலம் தரும்.
* வாட்டர் மெலன் (தர்ப்பூசணி) பழத்தில் சர்க்கரையும் நீர்ச்சத்தும் அதிகம் உள்ளன. இந்த சர்க்கரையிலிருந்து வெளிப்படும் சக்தியானது உடல் தூங்குவதற்கு தயாராவதை தடுத்துவிடும். மேலும், இதிலுள்ள அதிகளவு நீர்ச்சத்து அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருக்கத் தூண்டும். இதனால் தூக்கம் கெடும்.
* வாழைப்பழத்தில் நார்ச் சத்தும் சர்க்கரையும் அதிகம். இவை அஜீரணத்தை உண்டுபண்ணி தூக்கத்தை கெடுக்கும். இதனால் வாழைப்பழத்தை பகலில் உண்பதே நன்மை தரும்.
* பைனாப்பிள் பழத்தை இரவில் உட்கொண்டால் அதிலுள்ள புரோமெலைன் என்ற பொருள் செரிமான உறுப்புகளில் வீக்கத்தை உண்டுபண்ணும். மேலும் அசிடிட்டியும் தூக்கமின்மையும் ஏற்படக் காரணமாகும்.
* சப்போட்டா பழத்தில் நார்ச்சத்தும் சர்க்கரைச் சத்தும் அதிகம். இவை நம் ஸ்லீப் சைக்கிளில் தடை ஏற்படுத்தி தூக்கத்தைக் கெடுக்கும். சர்க்கரைச் சத்திலிருந்து வெளிப்படும் சக்தியும் தூக்கமின்மையை உண்டுபண்ணும்.
* கொய்யா பழத்தையும் இரவில் உண்பது நல்லதல்ல. இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஊக்குவித்து அசௌகரியத்தை உண்டுபண்ணும். மேலும் ஸ்லீப் சைக்கிளிலும் தொந்தரவைக் கொடுத்து தூக்கத்தைக் கெடுக்கும்.
எனவே, மேற்கூறிய ஆறு வகைப் பழங்களை இரவில் உண்பதைத் தவிர்த்து, பகலில் மட்டுமே உண்போம்; உடல் ஆரோக்கியம் காப்போம்.